

பெரியகுளம்
மேற்குத் தொடர்ச்சிமலையில் பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிரம்பி வழியத் தொடங்கியுள்ளது. எனவே வராகநதி கரையில் வசிப்பவர்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மேலும் கொடைக்கானல் பகுதியிலும் மழைப் பொழிவு அதிகம் இருந்ததால் சோத்துப்பாறைக்கான நீர் வரத்து அதிகரித்தது.
இந்த அணை பெரியகுளத்தில் இருந்து 8 கிமீ.தூரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் மொத்த உயரம் 126 அடியாகும். மலைப்பகுதியில் பெய்யும் மழையையே இந்த அணை முழுமையாக சார்ந்துள்ளது.
இதனால் கடந்த பல வாரங்களாக அணைக்கு நீர் வரத்து இன்றி நீர்வரத்து ஓடைகள் வறண்டு கிடந்தன.
இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரிக்கத் துவங்கியது.
இன்று காலை அணையின் முழுக் கொள்ளளவான 126 அடியை எட்டியது. நீர்வரத்து தொடர்ந்ததால் அணையில் இருந்து நீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 298 கன அடியாகவும், நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
அணைக்கு வரும் 298 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இது தவிரஅணையிலிருந்து குடிநீருக்காக 3 கனஅடிதண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இங்கிருந்து வெளியேறும் நீர் பெரியகுளம் வராகநதி வழியே வடுகபட்டி, மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதி வழியே சென்று வைகை அணையில் கலக்கிறது.
தற்போது அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பெரியகுளம் உள்ளிட்ட ஆற்றின் வழித்தடத்தில் உள்ள பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அணை மூலம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதி மக்கள் குடிநீர் வசதி பெறுவதுடன் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயத்திற்கும் பயன்படுகிறது. தற்போது இந்த அணை நிரம்பியுள்ளதால் பொதுமக்களும்,விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.