

மெட்ரோ ரயில் சேவை தொடங் கியதற்காக சென்னை மாமன்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மேயர் சைதை துரைசாமி பாராட்டு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
சென்னை மாநகரின் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நிறை வேற்றி தந்திருக்கிறார். இந்த திட்டம் செயலாக்கத்தில் எந்த தொய்வும் ஏற்படக்கூடாது என்பதற்காக முதல்வர் ஜெயலலிதா மாநில அரசின் பங்குத் தொகையை ஆண்டு தோறும் தொடர்ந்து வழங்கிட ஆணையிட்டவாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தொகை வழங்கப்பட்டது.
இந்த ரயிலை இயக்க பாதுகாப்பு ஆணையர் கடந்த மாத இறுதியில், இறுதி ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு அனுமதியை வழங்கினார். ஆனால், திமுக தலைவர் கருணாநிதியும், ஸ்டாலினும் தாங்கள் போராட்டம் நடத்து வோம் என்று அறிவித்ததால்தான் மெட்ரோ ரயில் இயக்கப் பட்டுள்ளது என்றும், இத்திட்டம் தங்களுடைய திட்டம் என்றும் பொய்யான தகவலை தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை மாநகருக்கு அர்ப்பணித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி யையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
திமுக வெளிநடப்பு
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கருணாநி திக்கு நன்றி தெரிவிக்குமாறு வலியுறுத்தினர். இதை மேயர் சைதை துரைசாமி ஏற்காததால் மாமன்றத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். 2007-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த முதல்வர் கருணாநிதி எடுத்த நடவடிக்கையால்தான் மெட்ரோ ரயில் திட்டம் வந்ததாகவும் அவருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற மறுத்ததால் வெளிநடப்பு செய்ததாகவும் திமுக மாமன்ற உறுப்பினர் டி.சுபாஷ் சந்திரபோஸ் கூறினார்.