Published : 03 Oct 2019 10:31 AM
Last Updated : 03 Oct 2019 10:31 AM

மரக்கன்று துளிர்க்குதா? தவிக்குதா?-  ‘வாட்ஸ் அப்’ மூலம் கண்காணிக்கும் கோத்தகிரி இளைஞர்கள்

ஆர்.டி.சிவசங்கர்

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்ற திரைப்பட பாடல் வரிகளுக்கேற்ப மரம் நட்டதுடன் பணி முடிந்தது என்றில்லாமல், அதை தினமும் பராமரித்து, அதன் ஒவ்வொரு நிலையையும் புகைப்படம் எடுத்து ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் கோத்தகிரி இளைஞர்கள் கண்காணித்து வருவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தின் தண்ணீர் தொட்டியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. நீலகிரியில் உற்பத்தியாகும் நீர் பவானி ஆறு மூலம் காவிரியின் படுகையையே வளமாக்குகிறது. தொடர் வன அழிப்பால் நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து தன்செழிப்பை இழந்து வருகிறது. இரண்டாம் சிரபுஞ்சி என அழைக்கப்படும் தேவாலாவிலேயே கடந்த சில ஆண்டுகளாக மழையின்றி காணப்படுகிறது.
மலைகளில் வழிந்து வந்த நீர், வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் திசை மாறி சாலைகளில் வீணாக வழிந்தோடி சாக்கடையில் கலக்கிறது. மரம் நடுகிறோம் என்ற பெயரில் அறியாமையால் கற்பூரம், சீகை ஆகிய அந்நிய மரங்களை நட்டதால், மிஞ்சிய நீரும் நீலகிரியில் வற்றியது. எனவே, நீலகிரி மாவட்டத்தை மீட்டெடுக்க ‘இனியொரு விதி செய்வோம், மரம் செய்வோம்’ என புறப்பட்டுள்ளனர் கோத்தகிரி இளைஞர்கள்.

இவர்களுடன் பொதுமக்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் கைகோர்த்துள்ளனர். இந்த முயற்சியை முன்னெடுத்துள்ள கருவி அறக்கட்டளை, மரத்தை நடுவதோடு, அந்த மரத்தின் வளர்ச்சியை ‘வாட்ஸ் அப்’ குழுவின் மூலம் கண்காணிக்கிறது என்கிறார் அறக்கட்டளை நிர்வாகி கண்ணன்.

அவர் கூறும்போது, ‘தன் சுய நலத்தாலும், பேராசையாலும், அறியாமையாலும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய மனிதனே அதனை அழித்துக் கொண்டிருக்கிறான். இழந்த பசுமையை மீட்க மரங்கள் நடுவதோடு அதன் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க அறக்கட்டளை மூலம் ‘வாட்ஸ் அப்’ குழு உருவாக்கப்பட்டது. இதில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், இயற்கை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், துறை வல்லுநர்கள் மற்றும் மண்ணின் மீதும், மனிதத்தின் மீதும் அன்பு கொண்ட மக்கள் இக்குழுவில் இணைந்து, சுற்றுச்சூழலைக் காக்க முன்வந்துள்ளனர்.

மரக்கன்றுகள் வழங்கப்பட்ட தேதி, நடப்பட்ட இடம், நடும் நபர், அதன் இன்றைய நிலை என அனைத்து தகவல்களும் முறையாக குழுவின் மூலம் வெளிப்படையாகக் கண்காணிக்கப்படுகிறது. அரசுத்துறை அலுவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் திருமணம், பிறந்தநாள், திருவிழா என முக்கியமான நிகழ்வுகளின்போது நம் மண்ணுக்கு உகந்த நாற்றுகளை நட்டு பராமரிக்கின்றனர். மூன்று மாதங்களில், 5000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. கோத்தகிரி மட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் பொதுமக்கள் மரங்களை நட்டு, மரத்தின் புகைப்படங்களை 9842648068 என்ற ‘வாட்ஸ் அப்’ குழு எண்ணில் பதிவிடலாம். இந்த முயற்சியால் மரங்களின் பரப்பு அதிகரித்து, வனம் வளம் பெறும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x