

சென்னை
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு பிரிவின் உதவி இயக்குநர் ஆர்.வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் நிகழ்ச்சிகள், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்வது வழக்கம். கடந்த 30-ம் தேதி சென்னை ஐஐடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை என்ற புகார் எழுந்தது.
இந்நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு பிரிவின் உதவி இயக்குநர் ஆர்.வசுமதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வசுமதியை பணியிடை நீக்கம் செய்து பிரசார் பாரதியின் தலைமை செயல் அதிகாரி ஷசி ஷேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த பணியிடை நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வசுமதி சென்னையில் தங்கி இருக்கும்படியும், வெளியூர் செல்ல அவசியம் ஏற்பட்டால் முறையான அனுமதி பெற்று செல்லும்படியும் பணியிடை நீக்க உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் நடந்த பிரதமரின் நிகழ்ச்சியை தூர்தர்ஷனில் இருந்து 18 கேமராக்கள் மூலம் வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும், நேரலை செய்வதற்கான தூர்தர்ஷன் வாகனத்தையும் ஐஐடி வளாகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். நேரலை செய்வதற்கான அனைத்து வசதிகள் இருந்தும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகவே பிரதமரின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து வசுமதி மற்றும் தூர்தர்ஷன் ஒளிபரப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தூர்தர்ஷன் நிலைய அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை நேரலை செய்யாத நிலையில், வசுமதி பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணியிடை நீக்கம் குறித்து விளக்கம் கேட்க உதவி இயக்குநர் வசுமதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் பதில் அளிக்கவில்லை.