Published : 02 Oct 2019 08:20 PM
Last Updated : 02 Oct 2019 08:20 PM

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு

சென்னை

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகசெய்யும் விதமாக மார்ச் 20, 2018-ல் பிறப்பித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. நீதி அரசர்கள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, பி.ஆர் கபாய் ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசின் மறு சீராய்வு மனு மீது இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியினர் மீது சாதிய பாரபட்சங்களும், இரக்கமற்ற முறையில் வன்கொடுமைகளும் ஏவப்பட்டு வருகின்றன. சத்துணவுக் கூடங்கள் முதல் மயானங்கள் வரை தீண்டாமை துயரங்கள் தொடர்கின்றன. உயர்கல்வி நிறுவனங்களும் சாதிய பாரபட்சங்களுக்கு விதிவிலக்கல்ல.

இந்த சூழ்நிலைகளில் தான் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜனநாயக எண்ணம் கொண்ட அனைவரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை மறுபரிசீலனை செய்யவேண்டும் என நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக 2018 ஏப்ரல் 2 அன்று வடமாநிலங்களில் தலித் இயக்கங்கள் மாபரும் பந்த் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தின. இப்போராட்டத்தின் மீது பாஜக அரசு நடத்திய தாக்குதலில் எட்டு தலித்துகள் கொல்லப்பட்டனர்.

தமிழகத்தில் 2018 ஜூலை 2 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைந்த மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தில் 20000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நலையில் இன்று உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை திரும்பப் பெற்றுக்கொண்டது பெரிதும் வரவேற்கத்தக்கது. குறிப்பாக தனது தீர்ப்புரையில் பின்வருமாறு நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது. "அரசியல் சாசனம் பட்டியல் சாதி, பழங்குடி மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பு அளித்தாலும் அவர்கள் இன்னமும் சமூக இழிவுக்கும், பாரபட்சத்திற்கும் ஆளாகிறார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கும், தவறான புகார்களுக்கும் காரணம் மனித தோல்விகள்தானே தவிர சாதி அமைப்பு அல்ல".

தீர்ப்பை வரவேற்கிற இத்தருணத்தில் வன்கொடுமை சட்டத்தைப் பாதுகாக்க போராடிய அனைத்து இடதுசாரி அமைப்புகள், தலித் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் பாராட்டுகிறோம்'' என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x