Published : 02 Oct 2019 07:35 PM
Last Updated : 02 Oct 2019 07:35 PM

நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிக்காக ரூ.244 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு: தமிழக அரசு 

சென்னை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.244 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதில் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில் உள்ள சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர், ஊரகப் பகுதி குடியிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. அப்பகுதிகளில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக ரூ.244 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதில் தெரிவித்துள்ளது.

இதன்படி, முதல்கட்டமாக காஞ்சி மாவட்டத்தில் சென்னை புறநகர் சாலை - முடிச்சூர் சாலை சந்திப்பு முதல் பாப்பன் கால்வாய் வரை, பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை தலா ரூ.20 கோடி வீதம், ரூ.40 கோடியில் நீர்வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஆதனூர் ஏரி உபரிநீர் கால்வாய் பகுதியில் ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், பாப்பன் கால்வாய் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பிலும் சாலைகளுக்கு அடியில் பெரிய நீர்வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. அடையாறு ஆற்றுப்படு கையில், நந்திவரம், நன்மங்கலம், புது தாம்பரம், இரும்புலியூர் ஏரி கள் மற்றும் கோவளம் ஆற்றுப் படுகையில் நாராயணபுரம், பெரும் பாக்கம், திருவஞ்சேரி, ஒட்டியம் பாக்கம் ஏரிகளில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில், வெள்ளத் தடுப்புப் பணிகளுடன் உபரி நீர் வெளியேற்றும் அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும், மணிமங்கலம் ஏரியின் கரைகள் ரூ.2 கோடியில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. அதேபோல், அடையாறு ஆற்றுப்படுகையில் ஆதனூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஏரி கள் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகையில் நன்மங்கலம் ஏரி ஆகிய ஏரிகள் ரூ.4 கோடியில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட உள்ளது.

அடையாறு ஆற்றின் உபநதியான ஒரத்தூர் ஓடையின் குறுக்கில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க, முதல்கட்டமாக ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஆரம்பாக்கம், ஒரத்தூர் ஏரிகளை இணைக்கும் கரைகள் அமைக்கப்பட உள்ளன. ஊரப்பாக்கம் மற்றும் நந்திவரம் ஏரிகளுக்கு இடையில் சாலையின் கீழ் ரூ.2 கோடியில் வெள்ளநீர் வடிகால், திருவள்ளூர் மாவட் டம் திருநின்றவூர் ஏரியில் ரூ.40 லட்சத்தில் உபரிநீர் வெளியேற்றத்தை முறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகளால், தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், சேலையூர், பள்ளிக்கரணை போன்ற புறநகர் பகுதிகளில் வசிக்கும் 6 லட்சம் மக்கள் பருவ மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பில் இருந்து காக்கப்படுவதுடன், 172 மில்லியன் கனஅடி நீர் சேகரிக்க வழி ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x