

சென்னை
சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் தமிழ்மொழியை ஒரு பாடமாக பயின்றவர்களே பங்கேற்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திமுக சட்டத்துறை தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், செயலாளர் இரா.கிரிராஜன் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம், 9.9.2019 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 176 சிவில் நீதிபதி பதவிகளுக்கு தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என்று கூறப்பட்டுள்ளது. கீழமை நீதிமன்றங்களுக்கும் அகில இந்திய அளவில் தேர்வு என்று மத்திய அரசு நினைக்கும்போதே தமிழக அரசு சிவில் நீதிபதிகள் தேர்வுகளை வடமாநிலத்தவர்களும் எழுதும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் நீதித்துறையில் தமிழ் மொழியை அறவே அழித்தொழிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு பாணியில் தமிழக அரசும் மேற்கொண்டு வருகிறது. நீதிமன்றங்களில் விசாரணை என்பது குற்ற வழக்காக இருந்தாலும், சிவில் வழக்காக இருந்தாலும் ஆவணங்களை மையப்படுத்திதான் வழக்குகள் நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
அப்படி பெரும்பாலான ஆவணங்கள் தமிழ் மொழியிலேதான் இருக்கும். தமிழில் ஆழ்ந்த அறிதல், புரிதல் இருந்தால் மட்டுமே கீழமை நீதிமன்றமாக இருந்தாலும், மாவட்ட நீதிமன்றமாக இருந்தாலும் வழக்குகளை சரியாகப் புரிந்துகொண்டு வழக்கில் முழுமையான தெளிவு பெற்று தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க முடியும் என்ற நிலையில் தமிழக அரசின் தேர்வாணைய அறிவிப்பு எதிர்காலத்தில் நீதிமன்றங்களில் தமிழில் அறிதல், புரிதல், தெளிவு இல்லாதவர்களும் நீதிபதி ஆகக் கூடிய வாய்ப்பினை உருவாக்கிவிடும்.
இதனால் வழக்காடிகள், வழக்கறிஞர்கள் என்னதான் திறம்பட வழக்குகளை நடத்தினாலும் அவற்றை சீர்தூக்கி பார்த்து நீதி வழங்க வேண்டிய நீதிபதிகள் சரியான தீர்ப்பு வழங்கிட இயலுமா என்பது கேள்விக்குறியே?. தமிழ்நாடு அரசின் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் தமிழ்மொழியை ஒரு பாடமாக பயின்றவர்களே பங்கேற்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன் வரவேண்டும்
எனவே தமிழக அரசு உடனடியாக சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் கண்டிப்பாக தமிழில் அறிதல், புரிதல், தெளிவு பெற்றவர்களையே சிவில் நீதிபதிகளாக உருவாக்கிடும் வகையில் தேர்வு அறிவிப்பாணையில் அவசியம் மாற்றம் செய்திட வேண்டும். தமிழ்மொழியை அறிந்தவர்கள் மட்டுமே சிவில் நீதிபதிகளாக வரமுடியும் என்கின்ற நிலையினை ஏற்படுத்த வேண்டும்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசின் தமிழ் விரோதப் போக்கிற்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து, தமிழுக்கு உரிய உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு தமிழ் மொழியை தமிழத்திலேயே அழித்திட செய்யும் நிலையை நீதித்துறையில் மேற்கொண்டு வருவது எதிர்கால தமிழ் சமுதாயத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
ஆகவே இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, தமிழை ஒரு பாடமாக படித்தவர்களே சிவில் நீதிபதிகள் தேர்வில் பங்கேற்க முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று திமுக சட்டத்துறை சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளனர்.