

ராமேசுவரம்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி இரண்டு சிறப்பு தபால் தலைகளை இலங்கை அரசு புதன்கிழமை வெளியிட்டது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கடந்த 02.10.2018 தேதி முதல் 02.10.2019 தேதி வரை இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளிலும் காந்தி குறித்த தபால் தலை கண்காட்சி, சர்வதேசக் கருத்தரங்குகள், நாடகங்கள், கண்காட்சிகள், கவிதை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு கொண்டாடியது.
புதன்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்து, இலங்கையின் தபால்துறை அமைச்சர் ஹலிம், அமைச்சர்கள் சாகல ரத்நாயக்க, நவீன் திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் தரஞ்சித் சிங் சந்துவினால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு காந்தியின் உருவச்சிலையொன்றை வழங்கினார். மேலும் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையின் அஞ்சல் துறை சார்பாக ரூ.45 மற்றும் ரூ.100 (இலங்கை ரூபாய்) மதிப்பில் இரண்டு சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இதனை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனை அருகே அமைந்துள்ள காந்தி சிலைக்கு மாலையிட்டு இந்தியத் துணைத் தூதர் பாலச்சந்தர் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வட மாகாண சபைத் தலைவர் சிவஞானம், யாழ்ப்பாணம் மேயர் இமானுவேல் ஆர்னால்ட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் யாழ்ப்பாணம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் காந்தியின் பாடல்களைப் பாடினர்.
எஸ். முஹம்மது ராஃபி