

ராமேசுவரம்
மகாத்மா காந்தியின் அஸ்திக்கு சென்னையிலிருந்து ராமேசுவரம் வரையில், தமிழக மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் அரிய வீடியோ 71 ஆண்டுகள் கழித்து கிடைத்துள்ளது.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா, கடந்த 02.10.2018 தேதி முதல் 02.10.2019 தேதி வரை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. காந்தி குறித்த தபால் தலை கண்காட்சி, சர்வதேசக் கருத்தரங்குகள், நாடகங்கள், கண்காட்சிகள், கவிதை அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு கொண்டாடியது.
இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இயங்கிவரும் தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வுகள் அடங்கிய 6 மணிநேரங்கள் கொண்ட 30 ரீல்கள் அளவிலான ஆவணப்படங்களைச் சேகரித்துள்ளது.
இந்த ஆவணப்படத்தில் 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் அஸ்தியை சென்னையிலிருந்து ரயிலில் ராமேசுவரத்திற்குக் கொண்டு செல்லும்போது தமிழக மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் அரிய வீடியோவும் அடங்கும். இந்த வீடியோ பதிவில் சென்னையிலிருந்து அஸ்தி ராமேசுவரம் கொண்டு செல்லும் வழியில் மதுராந்தகம், சிதம்பரம், புதுக்கோட்டை, செட்டிநாடு, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் பொதுமக்கள் கண்ணீர் மல்க காந்தியின் அஸ்தியை வழிபட்டு அஞ்சலி செலுத்துகின்றனர். இந்தக் காட்சி சுமார் 30 நிமிடங்கள் அடங்கிய காட்சியாக உள்ளது. மகாத்மா காந்தி மறைந்து 71 ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ காட்சி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய திரைப்பட ஆவணக் காப்பம் 30 ரீல்கள் அடங்கிய ஆவணப் படங்களை, உலகப் புகழ்பெற்ற படத்தயாரிப்பு நிறுவனங்களான பாரமவுண்ட், வார்னர், யூனிவர்சல், பார்தே, பிரிட்டிஷ் மூவிடோன் மற்றும் பல்வேறு தனி நபர்களிடமிருந்தும் சேகரித்துள்ளது.
இந்த 6 மணி நேர வீடியோ காட்சிகளில், '' மகாத்மா காந்தியின் இரண்டாம் மகன் மணிலால் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி, ரவீந்திரநாத் தாகூர், ஆகியோர் காந்தியுடன் தோன்றும் காட்சிகளும், காந்தி தனது மனைவி கஸ்தூரிபாயுடன் விவசாயப் பணிகள் செய்யும் காட்சி, காந்தி, பிரிட்டன் சென்ற போது அங்குள்ள ஊடகங்கள் காந்தியைப் படம் பிடித்த காட்சிகள், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி மற்றும் கும்பகோணம் கோவில்களுக்கு காந்தி செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.
- எஸ். முஹம்மதுராஃபி
வீடியோ
சென்னையிலிருந்து ராமேசுவரத்திற்கு காந்தியின் அஸ்தியை கொண்டு செல்லும் வழியில் அஞ்சலி செலுத்தும் பொது மக்கள் காட்சிகள்
ராமேசுவரத்தில் காந்தியின் அஸ்தியை கரைக்க ஊர்வலமாகக் எடுத்துச் செல்லப்பட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் கரைக்கும் காட்சிகள்