

பேனர் விவகாரம் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா - சீனா இடையிலான உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசுகின்றனர்.
இந்தச் சந்திப்பு வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது. சட்டவிரோதமாகப் பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்திருந்தது. இருந்தும், அதையும் மீறி வைக்கப்பட்ட பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாகத் தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (அக்டோபர் 3) விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் தனது ட்விட்டர் பதிவில், "மாண்புமிகு பிரதமர் அவர்களே, தமிழ்நாடும், தமிழர்களும் சுபஸ்ரீயின் மரணத்தை ஏற்றுக்கொள்ளத் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், உங்கள் பேனர்களை வைக்க தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை அணுகி அனுமதி கோரியுள்ளது.
இந்த ஆபத்தான பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் நீங்கள் முன்னோடியாகத் திகழ்ந்தால் அது தமிழர்களின் உணர்வின் மீது உங்களுக்கிருக்கும் அக்கறையைக் காட்டும். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய விளம்பரத்தைத் தரும். ஜெய்ஹிந்த்" என்று தெரிவித்துள்ளார் கமல்.