

புதுச்சேரி
காந்தி தொடர்பான வினாடி வினா நடத்தி அதில் வெல்வோருக்கு அவரது சுயசரிதை நூலான சத்திய சோதனையை அவரது பிறந்த நாளில், இளையோருக்கு இலவசமாக விநியோகிக்கும் சேவையில் புதுச்சேரி பேராசிரியர் சம்பத்குமார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
புதுச்சேரி, தாகூர் கலைக் கல்லூரியில் தத்துவத் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் சம்பத்குமார். இக்கல்லூரியில் படித்தபோது மாணவர் இயக்கத் தலைவராக இருந்தார். அதே கல்லூரியில் 1994-ல் பேராசிரியரானார்.
வாசகர் வட்டம் என்ற அமைப்பைத் தொடங்கி புத்தக வாசிப்பை இளையோரின் மனதில் இடம்பெற முயற்சியெடுத்தார். இதையொட்டி, கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாளில் அவரது சுயசரிதை நூலை இலவசமாக விநியோகித்து வருகிறார்.
இதுதொடர்பாக பேராசிரியர் சம்பத்குமாரிடம் பேசியபோது, "புத்தக வாசிப்பை இளையோரிடம் கொண்டுசெல்ல நண்பர்களுடன் பல முயற்சிகளை எடுத்தேன். அவர்களைப் புத்தகம் படிக்கச் செய்ய, முதல் படியாக நல்ல நூல்களை இலவசமாகத் தர முடிவு எடுத்தேன்.
காந்தியடிகளை மிகவும் பிடிக்கும் என்பதால் முதலில் அவரின் சுயசரிதை நூலான சத்திய சோதனையை இலவசமாகத் தர முடிவு எடுத்தோம். ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாளில் சத்திய சோதனை நூலை இலவசமாகக் குறிப்பிட்ட பிரதிகள் தரத் தொடங்கினேன். கடந்த 2006-ல் புதுவை கடற்கரை காந்தி சிலை முன்பு ஒரே நேரத்தில் பலருக்கு சத்திய சோதனை நூல்களை இலவசமாக வழங்கினோம்.
அதைத் தொடர்ந்து காந்தி பிறந்த நாளில் அவரை பற்றிச் சில கேள்விகள் கேட்டு அதற்குப் பரிசாக இலவசப் புத்தகங்களைத் தருவதாக தற்போது மாற்றியுள்ளேன். இதனால் தலைவர்களைப் பற்றி இளையோர் அறிந்துகொள்ள வாய்ப்புகள் உண்டு. இந்த ஆண்டும் வினாடி வினா நடத்தி நூலை வழங்க உள்ளேன்" என்று குறிப்பிட்டார்.
செ. ஞானபிரகாஷ்