

புதுச்சேரி
புதுச்சேரியில் இன்று அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
புதுச்சேரியில் இருந்து தமிழக அரசுப் பேருந்து ஒன்று, கடலூர் நோக்கி இன்று காலை சென்றது. இதேபோல் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று வந்தது. கிருமாம்பாக்கம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார். பேருந்தில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கார் ஓட்டுநரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பலியான கார் ஓட்டுநர் தரங்கம்பாடியைச் சேர்ந்த பத்மநாபன் என்பதும், விபத்து நடைபெற்ற இடத்தில் சாலையின் நடுவே தனியார் கார் நிறுவனம் சார்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையே (பேரிகார்ட்) விபத்துக்குக் காரணம் என தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- செ.ஞானபிரகாஷ்