

மாமல்லபுரம்
பிரதமர், சீன அதிபர் வருகையை யொட்டி மாமல்லபுரத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் பாதுபாப்பு காரணங்களுக்காக அக்.6 முதல் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் ஆகியோர் இரு நாடுகளுடனான ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைக்காக, மாமல்லபுரத் துக்கு வர உள்ளனர். இதனால், கோவளம், மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் வரையில் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மேலும், இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கலைச் சின்னங்களைப் பார்வையிட உள்ளனர்.
இதனால், மாமல்லபுரம் நகரில் பல்வேறு கட்டமைப்புப் பணிகளும். பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகி யோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலை யில், தலைவர்களின் வருகையை ஒட்டி நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (அக்.2) மாமல்லபுரம் வர உள்ளார். அங்கு நடைபெறும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். மேலும் மாமல்லபுரம் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன.
துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு
இதற்கிடையே பாதுகாப்பு காரணங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள், தங்களின் துப்பாக்கிகளுக்கான உரிமங்கள் மற்றும் துப்பாக்கிகளை அவர்களின் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரம் துணை காவல் கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள துப்பாக்கிகள் மற்றும் புதுப் பிப்பதற்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ள துப்பாக்கிகளை போலீ ஸார் பறிமுதல் செய்து வரு கின்றனர்.
கடலுக்குள் செல்ல தடை
பாதுகாப்பின் ஒரு அம்சமாக மாமல்லபுரம், கல்பாக்கம், தேவநேரி, கொக்கிலமேடு, சூலேரிக்காடு, நெம்மேலி, பட்டிபுலம் பகுதி மீனவர்கள் வருகிற 6-ம் தேதியில் இருந்து 13-ம் தேதி வரை ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும், இதே போல் வருகிற 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மீனவர்கள் உட்பட யாருமே கடலுக்கு செல்லக்கூடாது எனவும், கடலோர பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர்.