Published : 02 Oct 2019 07:41 AM
Last Updated : 02 Oct 2019 07:41 AM

நடைபாதை, பூங்கா, படகு சவாரி உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.9 கோடியில் பீர்க்கன்காரணை ஏரி சீரமைப்பு: பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் ஆய்வு

தாம்பரம்

பீர்க்கன்காரணை ஏரியை ரூ. 9 கோடியில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்

பீர்க்கன்காரணையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர் மலை ஆகிய பகுதி களில் இருந்து வெளியேறும் மழைநீர் சேகரமாகிறது. இந்நிலையில் பொதுப் பணித் துறை சார்பில், ஜப்பான் நாட்டு நிதி உதவி திட்டத்தின்கீழ், ரூ.9 கோடியே 81 லட்சம் மதிப்பில் ஏரியை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, நடை பாதை, பூங்கா, படகு சவாரி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

மேலும் வாகன நிறுத்துமிடம், பல் நோக்கு புல்வெளி, திறந்தவெளி திரை யரங்குகள், ஆவின் பார்லர்கள், பொது மக்கள் ஏரி கரைகளில் அமரும் வகை யில் இருக்கை வசதி ஆகியவை ஏற்படுத்தப் படுகின்றன. ஏரிக்குள் பறவைகள் தங்கும் வகையில் மரங்கள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இந்நிலையில், இந்த பணிகளை பொதுப்பணித் துறையின் சென்னை மண் டல தலைமை பொறியாளர் கே.அசோகன் நேற்று ஆய்வு செய்தார்.

அதேபோல் பருவ மழையை முன்னிட்டு, முன்னேச்சரிக்கை நடவடிக்கை யாக தாம்பரத்தில் பாம்பன் கால்வாய் சீரமைப்பு பணியையும் அப்போது அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது படப்பை பாசன பிரிவு உதவி பொறியாளர் தே.குஜ்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சி, திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டங்களில் ரூ.7 கோடியே 65 லட்சம் மதிப்பில் ஏரிகளின் உபரி நீர் கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 15-ம் தேதிக் குள் அனைத்து பணிகளும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

மேலும் ஏரிகளை பாதுகாக்க தேவை யான மணல் மூட்டைகளை, இயந்திரங்கள், ஜேசிபி உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரிகளை பாதுகாக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பருவ மழையை எதிர்கொள்ள பொதுப்பணித் துறை தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x