Published : 28 Jul 2015 08:45 AM
Last Updated : 28 Jul 2015 08:45 AM

உணவில் விஷம் - குடும்பமே பலி: 2 பேர் கவலைக்கிடம்; போலீஸார் தீவிர விசாரணை

ஏழுகிணறு பகுதியில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை கொண்டித்தோப்பு வெங்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தக்குமார் (57). அரிசி கடை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

இவரது மனைவி கலைவாணி (52). இவர்களது மகன் புருஷோத்தமன் என்ற வினோத் (30), கலைவாணியின் தாயார் சிவகாமி, சிவகாமியின் தங்கை லலிதா, நந்தகுமாரின் தாயார் ஜானகி. அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

கடந்த 25 ம் தேதி காலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவாக தோசை சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவரும் வாந்தி எடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல் சிகிச் சைக்காக அண்ணா சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்ந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் நந்தக்குமார், கலைவாணி, வினோத், லலிதா ஆகிய 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். நந்தக்குமாரின் தாயார் ஜானகி, மாமியார் சிவகாமி ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உணவில் விஷம் கலந்திருந்ததே 4 பேரின் உயிரிழப்புக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் நோக்கத்துடன் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு இருந்தால் மருத்துவமனைக்கு சென்றிருக்க மாட்டார்கள். எனவே உணவில் விஷம் கலந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது.

தகவல் சொல்வதற்கும் யாரும் இல்லை. தற்போது உயிரோடு இருக்கும் சிவகாமி, ஜானகி இருவரும் சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வருவதால் அவர்களிடம் போலீஸாரால் விசாரணை நடத்த முடியவில்லை.

ஒரே குடும்பத்தில் 4 பேர் இறந்திருப்பது கொண்டித்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலையா? கொலையா? என்பது குறித்து ஏழுகிணறு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை முடிவில்தான் அவர்கள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x