

சென்னை
ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
போட்டியிட்ட இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக. எம்எல்ஏ இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது கோரிக்கை மனுவில், “வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்துவிட்டனர். 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கினார். அவரது தீர்ப்பில், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்யும் வகையில் அந்தத் தொகுதியில் பதிவான 19, 20, 21 சுற்றுகளில் எண்ணப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களையும் மீண்டும் எண்ண வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்பதாகத் தெரிவித்தார்.
203 தபால் வாக்குகளையும், மின்னணு வாக்கு இயந்திரங்களையும் வரும் அக்டோபர் 4-ம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.