Published : 01 Oct 2019 03:09 PM
Last Updated : 01 Oct 2019 03:09 PM

பாஜக தயவில்லாமல் எந்தக் கட்சியும் ஆள முடியாது; ரஜினிதான் அடுத்த முதல்வர்: எஸ்.வி.சேகர் பேச்சு

சென்னை

பாஜக தயவில்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. அடையாறில் உள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள சிவாஜி கணேசனின் உருவப்படத்துக்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட சிவாஜியின் குடும்பத்தினர், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜு அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதேபோல நடிகர் எஸ்.வி.சேகரும் சிவாஜியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், ''சிவாஜிக்கு மரியாதை செலுத்த நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் வராதது வருத்தம் அளிக்கிறது. இதற்கு நடிகர் விஷால்தான் காரணம். கருப்பு பலூன் விடுபவர்கள் ஒன்றாகச் சேரும் போது, ஒரே கருத்து உள்ள ரஜினி மட்டும் பாஜகவில் இணையக் கூடாதா?

ரஜினி கண்டிப்பாக வரும் தேர்தலில் பங்கெடுப்பார். அவர் முதல்வராகக் கூடிய வாய்ப்பும் உள்ளது. இது எனது கருத்து.

தேர்தலில் யார் அதிக எண்ணிக்கையில் சீட்டுகளைப் பெறுகிறார்களோ, அவர்கள்தானே முதல்வராக முடியும். பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் ரஜினிதான் முதல்வர் என்று பாஜகவே அறிவித்தாலும் ரஜினிதான் முதல்வராகப் போகிறார்.

அதேபோல, பாரதிய ஜனதா கட்சியின் தயவு இல்லாமல், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது'' என்றார் எஸ்.வி.சேகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x