Published : 01 Oct 2019 02:31 PM
Last Updated : 01 Oct 2019 02:31 PM

அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறதா?- வானதி சீனிவாசன் பதில்

சென்னை

அதிமுக- பாஜக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுதொடர்பாக கட்சியில் ஏற்கெனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியாகத் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டுமோ, அதை முன்னதாகவே எடுத்திருக்கிறோம். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

சென்னை வந்த பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது மக்கள் மட்டுமல்ல, கட்சிகளும் அவரின் செயலை ஏற்றுக்கொண்டு விட்டதையே காட்டுகிறது.

சர்வதேச அரங்குகளில் தமிழ் மொழியைப் பற்றி, ஒரு நாட்டின் பிரதமர் பேசுவது முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது. அது மட்டுமல்ல, சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி, தமிழ் என்று கூறியதன் வாயிலாக நீண்ட நாட்களாக இந்த நாட்டில் நடந்துகொண்டிருக்கும் விவாதத்துக்கு, பிரதமரே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்'' என்றார் வானதி சீனிவாசன்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செப்.8-ல் தெலங்கானா ஆளுநராகப் பதவியேற்றார். அதன்பிறகு முதல் முறையாக சென்னை வந்த அவருக்கு சென்னை நலச் சங்கம் சார்பில் தியாகராய நகரில் பாராட்டு விழா நடைபெற்றது. அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமிழிசைக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் பங்கேற்று தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பாஜகவின் பிரதான கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில் யாரும் விழாவில் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல இடைத் தேர்தலிலும் அதிமுகவினர், பாஜகவைப் பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லை. இதனால் அதிமுக- பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் குரல்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x