

சென்னை
உயிரிழந்த தந்தையின் உடலுக்கு, கண்ணீர் மல்க வீர வணக்கம் செலுத்திய மகளின் செயல், காண்போரை உருகச் செய்தது.
சிஆர்பிஎப் படைப் பிரிவின் தலைமைக் காவல் அதிகாரி செந்தில் குமார், அந்தமானில் பணியாற்றி வந்தார். வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார், நேற்று மதியம் சக அதிகாரிகளுடன் கடலுக்குக் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கிய செந்தில் குமார், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு அவரின் உடல் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு சிஆர்பிஎப் சார்பில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.
அப்போது செந்தில் குமாரின் 14 வயது மகள் ஸ்ரீதன்யா, தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கண்களில் கண்ணீருடன் உரத்த குரலில், Parade Salute என்று கையை உயர்த்தி சல்யூட் அடித்தார். 'நானா' என்று கண்ணீர் மல்கக் கூறி, கைகூப்பி, தந்தையின் உடலின் முன்பு விழுந்து வணங்கினார்.
இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் குமாரின் உடலுக்கு ராணுவ அதிகாரிகளும் உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு செந்தில் குமாரின் உடல், அவரின் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.