Published : 01 Oct 2019 12:47 PM
Last Updated : 01 Oct 2019 12:47 PM

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட்

சென்னை

தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாகும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (அக்.1) வெளியிட்ட அறிக்கையில், "கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கெனவே உள்ள நடைமுறையை மாற்றி தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், நீதிபதிகளாகத் தேர்வு பெற்ற பின்பு பயிற்சிக் காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பினால் தமிழக வழக்கறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, தமிழ் தெரியாத இதர மாநிலத்தவர்களும் பணியில் அமரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழ்மொழி தெரியாதவர்களை கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது பல்வேறு உயர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணனாது ஆகும். தமிழகத்தில் தமிழ் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது நீதிபரிபாலனத்தில் பல்வேறு சிரமங்களை மக்களுக்கு ஏற்படுத்தும்.

கீழமை நீதிமன்றக் கட்டமைப்பைச் சிதைக்கும் விதமாகவும், நீதி பரிபாலன முறையில் மக்களை அந்நியப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் அனைத்து மட்டங்களிலும் தமிழ்மொழியை முழுமையாக வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழைப் புறக்கணிக்கிற நடவடிக்கையாக அமைந்துள்ளது.

எனவே, இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தமிழை உள்ளடக்கிய தேர்வை நடத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது," என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x