

மதுரை
நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களின் இலக்கு, ஆனால் நிச்சயம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், "இடைத்தேர்தலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் வழியில் அதிமுக சந்திக்கும்.
அதிமுக ஏழைகளுக்கான கட்சி. கடைக் கோடியில் கொடி பிடிக்கின்ற தொண்டனும் கோட்டையிலே உட்கார்ந்து ஆட்சி செய்யவைக்கும் கட்சி. இந்த இலக்கணத்தை வகுத்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செல்கிறோம். அப்படித்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி வேட்பாளர் தேர்வும் நடந்துள்ளது.
நாங்குநேரியில் ஒரு மண்ணின் மைந்தன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் நாங்குநேரி மண்ணின் வாசனையை அறிந்தவர், அங்குள்ள மக்களுடைய தேவைகளை அறிந்து புரிந்து பணி செய்யக்கூடியவர்.
ஆனால், திமுக கூட்டணி வேட்பாளர் வெளியூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிரார். அவருக்கு நாங்குநேரி மக்களுடன் இருக்கும் தொடர்பு என்ன?. அதிமுக வெல்வது முன்பாகவே மக்களுக்குத் தெளிவாக தெரிந்திருக்கிறது. அதனாலேயே எதிர்க்கட்சி வேட்பாளரை இறக்குமதி செய்துள்ளது.
தேர்தல் வெற்றிக்கு எங்களுடைய இலக்கு ஒரு லட்சம் என வைத்திருக்கிறோம். ஆனால், நிச்சயமாக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்துக்கு குறையாமல் வெற்றி பெறுவோம்" என்றார்.