

வி.சுந்தர்ராஜ்
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் 113 வயதான மிட்டாய் தாத்தாவை அவரது வீட்டுக்குச் சென்று அரசு வாகனத்தில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்த வருவாய்த் துறையினர், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி, பின்னர் வீட்டில் கொண்டு சென்று விட்டனர்.
பர்மாவைச் சேர்ந்தவர் முகமது அபுகாசிர் (113). அங்கு நடை பெற்ற போரின்போது அவரது மனைவி, மகன்கள், மகள் ஆகி யோர் உயிரிழந்தனர். பின்னர் பிழைப்புக்காக அங்கிருந்து 1956-ம் ஆண்டு இந்தியாவுக்கு தனது 50-வது வயதில் வந்த இவர் தஞ்சாவூர் மகர்நோன்புச்சாவடி ஆடக்கார தெருவில் தங்கி, தற்போது மிட்டாய் தயாரித்து நடந்து சென்று விற்று வருகிறார். இவர் முதியோர் உதவித்தொகை மற்றும் ரேஷன் கார்டு கேட்டு சில ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்து, எந்த நடவடிக் கையும் இல்லாததால் தொடர்ந்து முயற்சிக்கவில்லை.
113 வயதாகியும் உழைத்துப் பிழைத்து வரும் இந்த ‘மிட்டாய் தாத்தா' குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழில் கடந்த செப்.27-ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, முகமது அபுகாசிருக்கு உடனடியாக முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையி னருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் முகமது அபுகாசிரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்திய வருவாய்த் துறையினர், நேற்று காலை அவரது வீட்டுக்குச் சென்று அவரை அரசு வாகனத்தில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவருக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை வட் டாட்சியர் வெங்கடேஸ்வரன் வழங் கினார்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜன் அவரை அரசு வாகனத்தில் ஏற்றி தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே உள்ள தலைமை அஞ்சல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, முக மது அபுகாசிரின் பெயரில் கணக்கு தொடங்கியதுடன், மாதந்தோறும் தபால்காரர் மூலம் வீட்டுக்கே உதவித்தொகை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, அரசு வாகனத்தில் ஏற்றி வீட்டில் கொண்டு போய் பத்திரமாக விட்டனர்.
ரேஷன் கார்டுக்கும் தீர்வு
இந்நிலையில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கும் தீர்வு காணும் வகையில் வட்ட வழங்கல் துறையினர் நேரில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் முகமது அபுகாசிருக்கு ரேஷன் கார்டு வழங்க வட்ட வழங்கல் அலுவலர் ஏ.மரியஜோசப் நேற்று பரிந்துரை செய்துள்ளார்.
இதுகுறித்து மரியஜோசப் கூறியபோது, ‘‘முதியவர் முகமது அபுகாசிருக்கு ரேஷன் கார்டு வழங்க உடனடியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு ஸ்மார்ட் கார்டு கிடைத்துவிடும். அவருக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், 500 கிராம் சர்க்கரை ஆகியவை ரேஷனில் வழங்கப்படும்’’ என்றார்.
இதுகுறித்து முகமது அபுகாசிர் கூறியபோது, ‘‘என்னுடைய நிலையை எடுத்துக் கூறியவர் களுக்கும், எனக்கு உதவி செய்ய முன்வந்த மாவட்ட ஆட்சியர் உள் ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என் றார்.