

டி.ஜி.ரகுபதி
கோவை
கோவை மாநகரில், கட்டிடக்கழிவு கள் மறுசுழற்சி மையம் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது.
கோவை மாநகரில் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள், 4.50 லட்சத் துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாநகரில், பழைய கட்டிடங்களை இடித்து, புதிய கட்டிடங்கள் கட்டுவது அதிகரித் துள்ளன. பழைய கட்டிடங்கள் இடிக்கப்படும்போது, டன் கணக்கில் கட்டிடக் கழிவுகள் உருவாகின்றன. இவை, பாழடைந்த கிணறுகள், பள்ளங்களை மூடவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கட்டிடக்கழிவுகளை கொட்ட, பிரத்யேகமாக 18 இடங்கள் ஒதுக் கப்பட்டுள்ளன.
கட்டிடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து, பயன் தரும் பொருட்களாக மாற்றும் வகையில், கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் கோவையில் அமைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்தார். இதைத் தொடர்ந்து கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையத்துக்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது,‘‘டெல்லி, புனே ஆகிய நகரங்களில் மட்டுமே கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் உள்ளது. 3-வது நகரமாக கோவையில் இத்திட்டத்தை மாநகராட்சி, பொதுமக்கள், தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த ரூ.9 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. டெண்டர் நடத்தி, சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. உக்கடம் கழிவு நீர் பண்ணை வளாக சாலையில், மாநகராட்சிக்கு சொந்தமான 15 ஏக்கரில், இம்மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மாநகரில் தினசரி சராசரியாக 80 முதல் 100 டன் வரையிலான கட்டிடக்கழிவு குவிகிறது. இவற்றை மறுசுழற்சி செய்து பேவர் பிளாக் கற்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டன. உற்பத்தி தொடங்கிய 10 நாட்களில் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கப்பட்டு விடும். இத்திட்டத்தை செயல்படுத்த எடுக்கப்படும் ஒரு டன் கழிவுகளுக்கு மாநகராட்சி சார்பில் ரூ.567, அந்த தனியார் நிறுவனத்துக்கு கட்டணமாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்தினர் சீனாவில் இருந்து, மையத்துக்கு தேவையான இயந்திரங்களை கொள்முதல் செய்தனர். இந்த இயந்திரம் சீனாவில் இருந்து கடல் வழியாக சென்னை துறைமுகத்துக்கு கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது. வரிகுறைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இந்த இயந்திரம் துறைமுகத்தில் இருந்து வெளியே எடுத்து வர தாமதமாவதாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தரப்பில் இருந்து மாநகராட்சிக்கு விளக்கம் தரப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் அளித்த காலக்கெடுவுக்குள் அந்த நிறுவனத்தின் சார்பில் திட்டப்பணி தொடங்கப்படவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தினர் மாநகராட்சி நிர்வாகத்துடன் செய்த ஒப்பந்தம் கடந்தாண்டு இறுதியில் ரத்து செய்யப்பட்டது,’’ என்றனர்.
புதிய நிறுவனம் தேர்வு தாமதம்
‘‘மாநகரில் கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமைக்க, இதுவரை புதிய நிறுவனம் தேர்வு செய்யப்படவில்லை. இம்மையம் அமைப்பதில் ஏற்படும் தாமதத்தால், உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் சாலை, உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலை, சுண்டக்காமுத்தூர் சாலை, வாலாங்குளம் கரைப்பகுதி, முத்தண்ணன் குளம் சாலை, விளாங்குறிச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலை ஓரங்கள், நீர்நிலைகள் ஓரங்களில் கட்டிடக்கழிவுகளை மர்மநபர்கள் கொட்டிச் செல்கின்றனர். இதனால் நீர்நிலை மாசு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. தவிர, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட 18 இடங்களிலும் மலைபோல் கட்டிடக்கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்,’’ என சமூகஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகின்றன.
மையம் அமைக்க நடவடிக்கை
கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத் கூறும் போது,‘‘மாநகரில் கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடக்கழிவு மறுசுழற்சி மையம் அமைக்க இடம் கொடுத்தால், அம்மையத்தை தங்களது செலவில் கட்டிக் கொடுக்க கோயமுத்தூர் பில்டர்ஸ் அன்ட் கான்ட்டிராக்டர்ஸ் அசோசியேஷன் அமைப்பினர் முன் வந்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுடன் கலந்தாலோசனையும் நடத்தப்பட்டுள்ளது. மேலும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வெற்றிகரமாக செயல்படும், இது போன்ற ஒரு மையத்தை பார்வையிட துணை ஆணையர்் தலைமையில் ஒரு குழுவினர் விரைவில் செல்ல உள்ளனர்,’’ என்றார்.