Published : 01 Oct 2019 10:52 AM
Last Updated : 01 Oct 2019 10:52 AM

உதகை தாவரவியல் பூங்காவில் ‘டைனோசர் காலத்து மரம்’

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகள், பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு கடைசியாக அடைக்கலமாகும் இடம் உதகை தாவரவியல் பூங்கா. கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் இப்பூங்கா, தாவரவியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரியாகும். கடந்த 1847-ம் ஆண்டில் 55 ஏக்கர் பரப்பில் ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இப்பூங்காவில், முதன்முதலில் மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டன. காலப்போக்கில் உலகில் உள்ள அரியவகை மரங்கள், தாவரங்கள், மலர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பொக்கிஷமாக மாறியுள்ளது. இப்பூங்காவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளன. இவற்றை தவிர 127 வகை பெரணிகள் (பூ தாவரம்), ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர் வகைகள் உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் பல்வேறு மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றை தாவரவியல் பூங்காவில் நடவுசெய்தனர்.அதில் மிகவும் அரியவகை மரமாக இருப்பது ‘ஜிங்கோ பைலோபா’ எனும் டைனோசர் காலத்து மரம். 270 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் இது என தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை முன்னாள் இணை இயக்குநர் ராம்சுந்தர் கூறும் போது, “சீனாவில் நடந்த தொல்லியல் ஆய்வின்போது நிலத்துக்கு அடியில் படிமமாக இந்த வகை மரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஜிங்கோ பேரினக் குடும்பத்தைச் சேர்ந்த ஜிங்கோ பைலோபா திசு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து சீனாவில் நடவு செய்து மீட்டுருவாக்கம் செய்தனர். தற்போது உதகை தாவரவியல் பூங்காவில் இரு நாற்றுகளும், மரவியல் பூங்காவில் ஒரு நாற்றும் நடவு செய்யப்பட்டுள்ளன.
மிகவும் மெதுவாக வளரக்கூடிய இந்த வகை மரம், சுமார் 3000 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. காஷ்மீர் அல்லது இமாலயப் பகுதிகளைத் தவிர இந்தியாவில் சுமார் 5 எண்ணிக்கையில் மட்டுமே இந்த வகை மரங்கள்இருக்கக்கூடும். இங்கிலாந்தில் உள்ள ராயல் கிங் தாவரவியல் பூங்காவில் இந்த வகை மரம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. திசு வளர்ப்பு மூலம் ‘ஜிங்கோ பைலோபா’ மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய அதிகம் செலவாகும். ஆனால், துணுக்குகள் மூலம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது எளிதானது. எனவே, மரத்தின் துணுக்குகள் கொண்டு அதிகளவு நாற்றுகளை உற்பத்தி செய்து பொது இடங்களிலும், பிற பூங்காக்களிலும் நடவு செய்து பராமரிக்க வேண்டும்’என்றார்.

ஆய்வு நூல்களில்...

தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் கூறும் போது, ‘தாவரவியல் ஆய்வு நூல்களில் (Botanical survey of india, author: V.Lakshmi narasimman), அந்நிய மரங்களின் பட்டியலில் ஜிங்கோ பைலோபா மரம் மிகவும் பழமை வாய்ந்த மரம் என்றும் டைனோசர் காலத்தை சேர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மரத்தின் கன்று சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்டு உதகை தாவரவியல் பூங்காவில் நடவு செய்யப்பட்டது. அந்த மரம் பட்டுப் போனதால், திசு வளர்ப்பு மூலம் அந்த மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவில் மறு நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரம் மிகவும் தாமதமாக வளரக்கூடியதால், சில நேரங்களில் கன்றுகள் பட்டுப்போய்விடுகின்றன. இதனால், தொடர்ந்து திசு வளர்ப்பு மூலம் கன்றுகள் உற்பத்தி செய்து பராமரித்து வருகிறோம். டைனோசர் காலத்தை சேர்ந்தது என்பதாலும், இந்தியாவில் வேறு
எப்பகுதியிலும் இல்லாத இந்த மரம் உதகை தாவரவியல்பூங்காவில் இருப்பதும் பூங்காவுக்கு பெருமை சேர்ப்பதாகும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x