Published : 01 Oct 2019 10:44 AM
Last Updated : 01 Oct 2019 10:44 AM

மிதக்கும் வடமாநிலங்கள்; தவிக்கும் ரிக் தொழிலாளர்கள்!

கி. பார்த்திபன்

நாகரிக மாற்றம் என்ற போர்வையில் இயற்கையை அழித்து, செயற்கை வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் மாதம் மும்மாரி பொழிய வேண்டிய மழை மாறிமாறி பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பாசன வசதி அளித்து வந்த நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு, வானம் பார்த்த பூமியாய் காட்சியளிக்கிறது.

இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் விவசாயத்துக்கு பெரிதும் கைகொடுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க ரிக் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரிக் (போர்வெல்) தொழிலில் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாவட்டத்திலும் ஏறத்தாழ 5,000-க்கும் அதிகமான ரிக் வண்டிகள் உள்ளன.

இந்த ரிக் வண்டிகள் பெரும்பாலும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், பீகார் போன்ற மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

இது மகிழ்ச்சியளிக்கக் கூடியது என்றாலும்,இம்மழையால் வட மாநிலங்களில் இயக்கப்பட்டு வந்த ரிக் வண்டிகளுக்கு வேலையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நிலத்துக்கடியில் அதலபாதாளத்தில் இருக்கும் தண்ணீரையும் வெளிக் கொண்டுவரும் போர்வெல் தொழிலாளர்கள் வேலையிழந்து, அவர்களது வாழ்வு தற்போது அதலபாதாளத்தில் தத்தளிக்கிறது.

இதுகுறித்து சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த ரிக் மேலாளர் எஸ். சிவக்குமார் கூறியதாவது: சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டத்தில் ரிக் வண்டிகள் உள்ளன. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த வண்டிகள் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இயக்கப் படுகின்றன. ஒரு ரிக் வண்டிக்கு தலா 2 ஓட்டுநர், டிரில்லர், 10 ஹெல்பர், சமையலர் என, ஏறத்தாழ 15 பேர் வீதம் பணிபுரிவர். வறட்சி காரணமாக பெரும்பாலான விவசாயிகள் நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். இதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கின்றனர். வட மாநிலங்களில் குறைந்தபட்சம் 300 அடி முதல் அதிகபட்சமாக 1,000 அடி வரை ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழைக்காலம் என்பதால் அம்மாநிலங்களில் வேலையிருக்காது. ஆனால், இந்தாண்டு செப்டம்பர் மாதத்தைக் கடந்தும் மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறு, வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, அம்மாநிலங்களில் விவசாயமும் பாதிக்கப் பட்டுள்ளது.

அதேவேளையில் ரிக் தொழிலுக்கும் அடுத்த ஓராண்டு வரை வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பிய ரிக் வண்டிகள் வேலையில்லாத காரணத்தால்பட்டறைகளில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரிக் தொழிலை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்லவும் வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை மாநில அரசு கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பற்ற காலகட்டத்தில் ரிக் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்கினால் உதவியாக இருக்கும். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x