Published : 01 Oct 2019 10:36 AM
Last Updated : 01 Oct 2019 10:36 AM

புள்ளியியல் துறை தேர்வுகளை மாநிலங்கள் நடத்த வழி பிறக்குமா? 

த.சத்தியசீலன்

மத்திய அரசின் புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு நிறுவனமானது, கடந்த 1950-ம் ஆண்டு முதல் மத்திய அரசுக்குத் தேவையான புள்ளி விவரங்களைச் சேகரித்து அளித்து வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பதிவு செய்யப்படாத அமைப்பு சாரா நிறுவனங்கள் பற்றிய கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கோவையை அடுத்துள்ள போத்தனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வடமாநில புள்ளியியல் அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டபோது, மொழி தெரியாமல் விவரங்களை சேகரிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அளிக்கும் தகவல் முழுமையானதாக இருக்காது, நம்பகத்தன்மையற்றதாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள்.

“ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்" மூலமாக நடத்தப்படும் தேர்வு மூலமாக புள்ளியியல் துறையில் இளநிலை புள்ளியியல் அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

இவர்கள், புள்ளி விவரங்கள் மற்றும் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் பல்வேறு துறைகளில் பணியாற்றினாலும், தேசிய புள்ளியியல் நிறுவனத்தில் (களப் பணிகள் கோட்டத்தில்) 80 சதவீதம் பேர் பணியாற்றுகின்றனர்.ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வானது புள்ளியியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் உள்ளடக்கி நடத்தப்படுகிறது. பட்டப் படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம். பட்டப் படிப்பு பாடத்திட்டத்தையொட்டி, பொது அறிவு மற்றும் பொது விழிப்புணர்வு அடிப்படையில் கேள்விகள் அமையும்.
இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெறுபவர்கள் விரும்பிய துறையைத் தேர்வு செய்யலாம். இத்தேர்வானது சிவில் சர்வீஸ் தேர்வைப் போன்றது.

ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வை தமிழகத்தில் மிகக் குறைந்த அளவே பட்டதாரிகள் எதிர்கொள்கின்றனர். அதிலும், பெரும்பாலானோர் தேர்ச்சி பெறுவது இல்லை.அதேநேரத்தில், வட மாநில பட்டதாரிகள் இத் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தேர்ச்சி பெறுகின்றனர்.

காலிப் பணியிடங்கள் இருப்பதால் தமிழகத்தைத் தேர்வு செய்து தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மண்டலங்களில் பணியாற்றும் இளநிலைபுள்ளியியல் அலுவலர்களில் பெரும் பாலானோர் வடமாநில பட்டதாரிகள். கடந்த 20 ஆண்டுகளில் வெறும் ஒரு சதவீத தமிழக பட்டதாரிகள் மட்டுமே இப்பணியிடங்களில் உள்ளனர்.

தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றுக்கு முற்றிலும் தொடர்பில்லாத பிஹார், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியானா, மும்பை ஆகிய பகுதிகளில் இருந்து அலுவலர்கள் வந்துள்ளனர். புள்ளியியல் துறை பணியென்பது முழுக்க, முழுக்க களப்பணி. மக்களுடன், மக்களாக இருந்து அவர்களின் நாடித் துடிப்பை அறிந்து விவரங்கள் சேகரிப்பது. இதை வட மாநில அலுவலர்களால் சரிவர மேற்கொள்ள முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது. இதில், மத்திய அரசு உரிய தீர்வு காண வேண்டும்” என்கிறார், கல்வியாளர் எஸ்.பிரபாகரன்.

புள்ளியியல் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரி எம்.சுந்தர்ராஜன் கூறும்போது, ‘1999-க்கு முன்பு ஜூனியர் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் அலுவலர் பணியிடங்கள், அதற்குட்பட்ட மண்டலங்கள் அளவிலும், தமிழ்நாடு ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் மூலமாக புள்ளியியல் துறை அலுவலர் பணிக்கென தனியாக தேர்வு நடத்தப்பட்டது.

அதற்கு பின்னர் இத்தேர்வு தேசிய அளவிலான தேர்வாக மாற்றப்பட்டது. இத்தேர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் வரவேற்பு குறைந்து தேர்வர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்ததால், தேசிய அளவில் மாற்றப்பட்டிருக்கலாம்.
இதனால் வடமாநிலத்தினர் தேர்வெழுதி இப்பணியிடங்களுக்கு வருகின்றனர். நாட்டின் வளர்ச்சியில் இத்துறையின் பங்களிப்பு அளப்பரியது. இதில் நம்பகத்தன்மை மிகவும் அவசியம். எனவே அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, புள்ளி விவரம் மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்துவதே சரியாக இருக்கும். அப்போதுதான் சேகரிக்கப்படும் தரவுகள் தரமானதாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கும்.

தற்போது தனியார் நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த களப்பணியாளர்கள் ‘அவுட் சோர்சிங்’ முறையில் தேர்வு செய்யப்பட்டு, தற்காலிக பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்களது மாத ஊதியம் ரூ.21 ஆயிரம்,
ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வெழுதி வந்தால் ரூ.40,000-க்கு மேல் ஊதியம் பெறுகின்றனர். தமிழக இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.

புள்ளியியல் துறை பணியிடங்களை துறை மூலமாக அந்தந்த மாநிலங்களில் நிரப்பிக் கொள்ளவும், அதற்கான தேர்வை மாநில அளவில் நடத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தமிழக பட்டதாரிகளுக்கு இத்துறையில் வேலைவாய்ப்புகள் உருவாகும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x