

கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோயிலில் உரிய மரியாதை தராததால் வெளியேறிய வானமாமலை ஜீயரை, கோயில் அலுவலர் மற்றும் பட்டாச்சாரியார்கள் நேற்று காலை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினர். மீண்டும் உப்பிலியப்பன் கோயிலுக்கு வருமாறு அவரை அழைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பழமையான வானமாமலை மடத்தின் 31-வது ஜீயராக இருப்பவர் ராமானுஜ சுவாமிகள்(84). வழக்கமாக, சோழநாட்டு திவ்யதேச யாத்திரை மேற்கொள்ளும் ஜீயர் சுவாமிகளுக்கு, அந்தந்த கோயில்களில் பூரணகும்பம், சடாரி மரியாதை வழங்குவதுடன், கோயில் பட்டாச்சாரியர்கள், பெருமாள் சன்னதிக்கு ஜீயரை அழைத்துச் சென்று தரிசனம் பெற வைப்பது வழக்கம்.
கடந்த 11-ம் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோயிலுக்கு வந்த வானமாமலை மடத்தின் ஜீயர் ராமானுஜ சுவாமிகளுக்கு பூரணகும்ப மரியாதை வழங்கவில்லை. இதுபோன்ற வழக்கம் கிடையாது என்று கோயில் பட்டாச்சாரியர்கள் தெரிவித்தனராம்.
இதையடுத்து, பெருமாளுக்கு கொண்டு வந்த மாலை, வஸ்திரம், பழங்களை கோயில் யானையிடம் வழங்கிவிட்டு, கொடிமரம் அருகே நின்று பெருமாளை வணங்கிவிட்டு ஜீயரும், உடன் வந்தவர்களும் வெளியேறினர்.
“வைணவ சமயத்தில் நூற்றாண்டுகளாக நீடிக்கும் வடகலை, தென்கலை முரண்பாட்டின் நீட்சியாகவே இந்த அவமரியாதை நிகழ்ந்ததாக” ஜீயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜ ஜீயர், திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஆகியோர் கும்பகோணம் வந்து, நாதன்கோவில் கிளை மடத்தில் தங்கியிருந்த வானமாமலை ஜீயரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். இதற்கிடையில், வானமாமலை மடத்தின் ஜீயருக்கு ஏற்பட்ட அவமரியாதைக்கு இந்து அமைப்பினர் உள்ளிட்டோர் வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேலிட உத்தரவைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோயில் பட்டாச்சாரியர்கள், பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று நாதன்கோவிலுக்குச் சென்று, வானமாமலை ஜீயரை சந்தித்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கோரினர்.
மீண்டும் அவர் உப்பிலியப்பன் கோயிலுக்கு வருமாறும் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, கோயிலுக்கு வருவதாகத் தெரிவித்த ராமானுஜ ஜீயர், அவர்களுக்கு ஆசியும், பிரசாதமும் வழங்கினார்.
இதுகுறித்து வானமாமலை ஜீயரின் சீடர்கள் கூறும்போது, “உப்பிலியப்பன் கோயிலில் ஜீயருக்கு ஏற்பட்ட அவமரியாதையைத் தொடர்ந்து, அனைத்து ஜீயர்களும் ராமானுஜ சுவாமிகளை தொடர்பு கொண்டு பேசினர். இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகுதான் உப்பிலியப்பன் கோயில் பட்டாச்சாரியர்களும், பணியாளர்களும் நாதன்கோவிலுக்கு வந்து ஜீயரிடம் மன்னிப்பு கேட்டனர். அதை ஜீயரும் ஏற்றுக்கொண்டார்” என்றனர்.