

சென்னை
2 முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் ஓய்வுபெற்றதை அடுத்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்துத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைச் செயலாளராக சண்முகம் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராகப் பதவி வகித்த மோகன் பியாரே நேற்றுடன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையராக அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை அவர் கூடுதலாகக் கவனிப்பார்.
இதேபோன்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை செயலர் பொறுப்பு வகிக்கும் ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாகத் துறை செயலர்/ஆணையர் சத்யகோபால் ஓய்வு பெற்றதை அடுத்து அந்தப் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் உத்தரவின்பேரில் தலைமைச் செயலாளர் சண்முகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.