

சென்னை
பல்வேறு திட்டங்களின்கீழ் தமிழ கத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,825 கோடியை விரைவில் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு அளித் துள்ளார். ராமநாதபுரம், விருது நகர், நீலகிரி உள்ளிட்ட 6 மாவட் டங்களில் அரசு மருத்துவக் கல் லூரி அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
சென்னை ஐஐடியின் 56 -வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற் பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். அப்போது, பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:
மாநிலத்தின் நீர் தேவை அடிப் படையில், நதிகள் இணைப்பு அவசியமாகிறது. கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பின் மூலம் தமிழகத்துக்கு 200 டிஎம்சி நீர் வழங்க மத்திய ஜல்சக்தி அமைச்சருக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குவதுடன் நிதியையும் விரைவில் ஒதுக்க வேண்டும்.
‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை செயல்படுத்த ரூ.9,927 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியையும் வழங்க வேண்டும். பிரதமரின் கிரிஷி சஞ்சாயி யோஜனா திட்டத்தின்கீழ் கல்லணை கால்வாயை நவீனப்படுத்த தேவையான நிதியை வழங்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்துக்கான செலவு ரூ.14,600 கோடியில் இருந்து ரூ.19,058 கோடியாக உயர்ந்து விட்டது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவின தொகையை வழங்க வேண்டும். மேலும் 2-ம் கட்ட திட்டத்துக்கான செலவை தலா 50 சதவீதம் என மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.
புதிய மருத்துவ கல்லூரிகள்
ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மத்திய அரசின் நிதியின் கீழ் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைத்து, அந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை இணைக்கும் வகையில் அனுமதி அளிக்க வேண்டும். ‘உடான்’ திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே மாலை நேரத்திலும் விமானங்கள் இயக்கவும், கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமானம் இயக்கவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
மேலும், ஜிஎஸ்டியால் ஏற்பட்ட இழப்புக்காக ரூ.1,134 கோடியே 41 லட்சம், அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ரூ.2,109 கோடி, மத்திய இடைநிலைக் கல்வி இயக்கக திட்டத்தில் ரூ.1,092 கோடியே 22 லட்சம் ஆகியவை உட்பட 19 திட்டங்களுக்கு நிலுவையில் உள்ள ரூ.6 ஆயிரத்து 22 கோடியே 26 லட்சம், முந்தைய நிதி ஆணையங்களின் பரிந்துரைப்படி நிலுவையில் உள்ள ரூ.1,803 கோடியே 33 லட்சம் என மொத்தம் ரூ.7,825 கோடியே 59 லட்சம் நிலுவைத் தொகைகளை விரைவில் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.