

சென்னை
கல்வியை முடிக்கும் மாணவர்கள் எங்கு சென்றாலும், தாய்நாட்டுக்கு என்ன தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
சென்னை ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழா கிண்டி ஐஐடி வளாகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரி யால், ஐஐடி சென்னை ஆட்சிக்குழு தலைவர் பவன் கோயங்கா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், பட்டங் களை வழங்கி பிரதமர் மோடி பேசியதாவது:
மாணவர்களாகிய உங்கள் கண்களில் எதிர்காலக் கனவுக ளோடு, நாட்டின் எதிர்காலத்தையும் பார்க்கிறேன். மிகுந்த சிரமங்கள், தியாகங்களுக்கு இடையில் உங் களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ள உங்கள் பெற்றோருக்கு என் பாராட்டுகள். உங்களை பொறியாளர்களாக மட்டுமின்றி, நாட்டின் சிறந்த குடிமகனாகவும் உருவாக்கியுள்ள ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துகள்.
பெற்றோர், ஆசிரியர்கள், ஐஐடியில் இதர பிரிவில் பணி யாற்றுவோர், உணவு சமைப்பவர் கள், விடுதி சுத்தமாக்குபவர்கள் என அனைவருக்கும் நீங்கள் கட மைப்பட்டுள்ளீர்கள். அவர்களுக் காக எழுந்து நின்று கைதட்டல் வழங்குமாறு வேண்டுகிறேன். (இவ்வாறு பிரதமர் கூறியதும் மாணவர்கள் கைதட்ட, அரங்கமே அதிர்ந்தது.)
உலகிலேயே பழமையான தமிழ்
உலகிலேயே மிகவும் பழமை யான தமிழ் மொழியின் தாயகம் இது. தொழில் வாய்ப்புக்கான நாடாக இந்தியாவை தற்போது உலகமே உற்று நோக்குகிறது.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, தொழில் துறை தலைவர் கள், தொழிலதிபர்கள், முதலீட் டாளர்கள் என பலரை சந்தித்தேன். அங்கு உள்ள இந்தியர்கள் மத்தியில் புதிய இந்தியாவைப் பற்றிய நம்பிக்கை உருவாகியிருப்பதை கண்டேன்.
உலகம் முழுவதும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் இந்தியர்கள் புதிய அடையாளங்களை ஏற்படுத்தி யுள்ளனர். இவர்கள் எல்லாம் ஐஐடி பழைய மாணவர்கள் என்பது தெரியவந்தது. சமீபத்தில் இந்திய குடிமைப் பணியில் சேர்ந்த அதிகாரிகளிலும் ஐஐடி மாணவர்கள் அதிகம் இருந்தனர். புதிய கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள், இணைந்து பணி யாற்றும் திறன் ஆகிய மூன்றையும் எதிர்காலத்தின் முக்கிய தூண் களாக கருதுகிறேன்.
இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. இந்தியா இந்த இலக்கை எட்டுவதற்கு ஐஐடி மாணவர்கள், இளைய தலை முறையினர் தங்கள் பங்களிப்பை பெருமளவு வழங்க வேண்டும். ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான வலு வான தளத்தை உருவாக்க தீவிர மாக பணியாற்றி வருகிறோம். புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க இந்தியா சிறந்த தளமாக உருவெ டுத்து வருகிறது. நம் நாட்டில் 2, 3-ம் நிலை நகரங்கள், கிராமங்களில்கூட புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன.
இளைஞர்களாகிய நீங்கள் வழியில் உள்ள தடைகளை உடைத்து பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும். முன்னேற்றத் துக்காக கனவு காண்பதை எப் போதும் நிறுத்திவிடாதீர்கள். உங் களுக்கு நீங்கள்தான் போட்டியாளர் கள். புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இங்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் தாய்நாட்டுக்கு என்ன தேவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
நம் அன்றாட வாழ்க்கை முறை யால் உருவாகும் நோய்கள் நம் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். புதிய தொழில்நுட்பங்கள் மூலம் அவற்றை எதிர்கொள்ளவும், தப்பிக் கவும் முடியும். எப்போதும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்காக ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தில் மாணவர் கள் அதிகம் பங்கேற்க வேண்டும். பட்டம் பெற்றதுடன் முடிந்துவிடு வது அல்ல கல்வி. அது வாழ்நாள் முழுவதும் தொடரும்.
இவ்வாறு பிரதமர் கூறினார்.
முன்னதாக, சென்னை ஐஐடி யின் வைரவிழா தகவல்களை வெளியிட்ட இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஆண்டறிக்கை வாசித் தார். ஐஐடி ஆட்சிக்குழு தலைவர் பவன் கோயங்காவும் பேசினார்.
இந்த ஆண்டு 2,140 மாணவர்களில் 1,359 பேர் நேரில் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பாதுகாப்பு கெடுபிடி
பிரதமருக்கு அச்சுறுத்தல் இருப் பதாக உளவுத்துறை எச்சரித்துள்ள தால், பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருந்தன. செய்தியாளர்கள் உட்பட நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கருப்பு நிறத்தில் வைத்திருந்த பேனா, பர்ஸ், குடை உள்ளிட்ட அனைத்தையும் போலீஸார் வாங்கி வைத்துக்கொண்டனர்.