

சென்னை
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பில் அமைச்சர் சரோஜா தலைமையில் இன்று காலை கோட்டூர்புரத்தில் 1000 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துக்கொண்டார். அமைச்சர் சரோஜா கர்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து நலங்கு வைத்து சீர் வரிசைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியை ஒட்டி அரங்கில் கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, இதில் கரு உருவான நாள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் வளர்ச்சிக் காலமான முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம் மற்றும் கர்ப்பமுற்ற தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதார முறைகள் குறித்த தகவல்கள், கண்காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் அதிக ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களாலான உணவுகளும் கண்காட்சியில் இடம் பெற்றன.
இது மட்டுமன்றி சென்னை பெருநகர மாநகராட்சி மருத்துவ சேவைகள் துறை மூலம் இவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கும் ஆயிரம் கர்ப்பிணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வளையல் அணிவித்து நலங்கு வைத்து கர்ப்ப கால முன் பின் பராமரிப்பு குறித்த கையேடு மற்றும் தாம்பூலமுடன் புடவை, இணையுணவு மாவு, நெய், இரும்பு சத்து டானிக், பேரீச்சம் பழம், கொய்யாப்பழம், சிறு தானிய பிஸ்கட் ஆகியவை அடங்கிய வரிசைதட்டு சீர் வரிசையாக வழங்கப்பட்டது.
மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் துறை சார்பாக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு ஐந்து வகை கலவை சாதங்களான புளியோதரை, மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புதினா சாதம் மற்றும் தேங்காய் சாதத்துடன் சாம்பார், வத்தல் குழம்பு, ரசம், மோர, அப்பளம், பால் பாயசம் அடங்கிய விருந்து பரிமாறப்பட்டது.
சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் எஸ்.மதுமதி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை ஆணையர் டி. ஆபிரகாம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை இயக்குநர் (ம) குழும இயக்குநர் செல்வி.கவிதா ராமு, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். சீத்தாலட்சுமி, மற்றும் இதர துறை அலுவலர்களும் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.