Published : 30 Sep 2019 04:34 PM
Last Updated : 30 Sep 2019 04:34 PM

என்.ஆர்.காங் வேட்பாளர் யார் என்று தெரிவிக்காத ரங்கசாமி: அறிவித்த அதிமுக

புதுச்சேரி

புதுச்சேரியில் காமராஜ் நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு வாய் திறக்காமல் ரங்கசாமி புறப்பட்டார். எனினும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் விவரத்தை அதிமுக தலைமை அலுவலகத்தின் வாயிலில் அக்கட்சித் தரப்பு அறிவித்தது.

புதுச்சேரி காமராஜ் நகர் இடைதேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் ஏதும் வாங்கப்படவில்லை. முதலில் இடைத்தேர்தலில் போட்டியிடவே அக்கட்சி விருப்பமின்றி இருந்தது. ஆனால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவும், பாஜகவும் விருப்ப மனுக்களைப் பெற்று நேர்காணலும் நடத்தி வந்தது.
இச்சூழலில் சிலரின் அறிவுறுத்தலால் ரங்கசாமி அவசர அவசரமாக சென்னை சென்று அதிமுகவிடம் பேச்சுவார்த்தை நடத்தி காமராஜ் நகர் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்தார்.

இந்த முடிவை பாஜகவிடம் தெரிவிக்காததால் அக்கட்சியினர் கோபித்துக் கொண்டனர். அதையடுத்து பாஜக அலுவலகம் சென்று ரங்கசாமி தரப்பினர் சமாதானம் செய்தனர். ஆனால், மேலிடம்தான் இதில் முடிவு எடுக்கும் என பாஜக தரப்பினர் ஒதுங்கிக் கொண்டனர்.

அதேசமயம் வேட்பாளரைத் தேர்வு செய்யாமல் ரங்கசாமி இருந்து வந்தார். அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் முன்னாள் எம்எல்ஏ நேருவைப் போட்டியிட வலியுறுத்தினர். அவரும் போட்டியிடத் தயாராகி வந்தார். அமாவாசை அன்று கோயிலில் சாமி கும்பிட்டு முக்கியத் தலைவர்களைச் சந்தித்தார். இதையடுத்து அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன், கூட்டணி தர்மத்தை மீறிச் செயல்படுவதாக நேரு மீது குற்றம் சாட்டினார்.

அதிமுக தரப்பினர் செயல்பாட்டால் நேரு போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். என்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ரங்கசாமியும் அதிமுகவால் வழிநடத்தப்படுவதாக நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக ரங்கசாமி தனது கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் சாமியாருடன் நேற்று இரவு கலந்து ஆலோசித்து லாஸ்பேட்டையைச் சேர்ந்த புவனா (எ) புவனேஸ்வரனை வேட்பாளராகத் தேர்வு செய்தார். எனினும் இதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதையடுத்து கோயில்களுக்கு காலையில் சென்று பூஜை செய்து வேட்பு மனுவுடன் தனது காரில் வேட்பாளரையும் ஏற்றிக்கொண்டு தேர்தல் அலுவலகத்துக்கு ரங்கசாமி வந்தார்.

வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் முறைப்படி தங்களது வேட்பாளர் விவரத்தை ரங்கசாமி தெரிவிக்கவில்லை. ஒரு வார்த்தை கூட பேசாமல் தவிர்த்தார். காரில் ஏறும் முன்பு அதிமுக எம்எல்ஏகளிடம் தெரிவித்துவிட்டுப் புறப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அருகேயுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் வாயிலில் அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், "அதிமுக என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி சார்பில் புவனா (எ) புவனேஸ்வரன் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக காங்கிரஸ் செயல்படாததால் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.

முறைப்படி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

என்.ஆர்.காங்கிரஸுக்கு பாஜக ஆதரவு

பாஜக நிலைப்பாடு தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, "இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்ப மனு வாங்கினோம். ஆனால், கட்சித் தலைமை என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கக் கூறியுள்ளதால், அந்த வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளோம்" என்றார்.

செ. ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x