Last Updated : 30 Sep, 2019 04:09 PM

 

Published : 30 Sep 2019 04:09 PM
Last Updated : 30 Sep 2019 04:09 PM

பி.வி.சிந்துவை மணப்பேன்.. வாராவாரம் மனு கொடுக்கும் 75 வயது முதியவர் இன்றும் வந்தார்

மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரியிடம் மனு வழங்கும் முதியவர். (பச்சை துண்டு அணிந்திருப்பவர்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 75 வயது முதியவர் 16 வயது என பிறப்புச் சான்றிதழ் கேட்டும், பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கோரியும் இன்று(செப்.30) மீண்டும் மனு அளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே விரதக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி(75). விவசாயியான இவர் கடந்த ஓராண்டாக தனக்கு 16 வயது என பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து வந்தார்.

இதனால் குறைதீர்க்கும் பிரிவில் உள்ள அலுவலர்கள் மலைச்சாமியை கண்டாலே எரிச்சல் அடைந்தனர். இருந்தபோதும் மலைச்சாமி ஆட்சியரின் குறைதீர்க்கும் நாளுக்கு வருவதை நிறுத்தவில்லை.

இந்நிலையில் கடந்த 16-ம் தேதி ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தனக்கு கல்வி மற்றும் விளையாட்டு மீது ஆர்வம் உள்ளதாகவும், இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என, அவரது படத்துடன் கூடிய மனுவை ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடம் அளித்தார். அவரும் மனுவைப் பெற்றுக் கொண்டு, முதியவர் மலைச்சாமியை அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கல்வி, விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. எனக்கு தற்போது 16 வயதுதான் நடைபெறுகிறது. எனக்கு பொறுத்தமானவர் பி.வி.சிந்துதான், அதனால் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை எங்கிருந்தாலும் விடப்போவதில்லை. அவரை தூக்கி வந்தாவது திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று (செப்.30)நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த முதியவர், தனது சொத்துப்பிரச்சினை குறித்து மனு அளித்தார்.

மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரியிடம் வழங்கும்போது, தனது சொத்துப்பிரச்சினை குறித்து கூறிவிட்டு, உங்களை எனது தாயாகவும், சகோதரியாகவும் நினைக்கிறேன். நீங்கள் தான் எனக்கு பி.வி.சிந்துவை திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறினார். மாவட்ட வருவாய் அலுவலரும் அவரது கோரிக்கையை கேட்டுவிட்டு, அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில், வாரந்தோறும் மனநிலை சரியில்லாதவர் போல் மனு அளிப்பதும், ஒரு சர்வதேச பேட்மிண்டன் வீராங்கணையை அசிங்கப்படுத்தும் நோக்கில் ஆட்சியரிடமே வந்து கோரிக்கை வைப்பதும் வேடிக்கையாக உள்ளது. அதிகாரிகளும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, அவரை ஊக்கப்படுத்துவதுபோல் உள்ளது.

அவர் நல்ல மனநிலையில் இருக்கிறாரா என்பதைக்கூட பரிசோதிக்க மனநல மருத்துவரின் ஆலோசனைக்கு அதிகாரிகள் பரிந்துரைக்கவில்லை. அல்லது அவருக்கு மனநல ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்கும் அலுவலர்களின் கருத்தாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x