Published : 30 Sep 2019 02:47 PM
Last Updated : 30 Sep 2019 02:47 PM

தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: முதல்வர் பழனிசாமி

சென்னை

வாழ்நாளில் ஒருமுறையாவது ரத்த தானம் செய்வோம் என்று தேசிய தன்னார்வ ரத்த தான நாளை முன்னிட்டு தமிழக மக்களிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரைக் காப்பாற்றும் புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ ரத்த தான நாளின் கருப்பொருள் "வாழ்நாளில் ஒருமுறையாவது ரத்த தானம் செய்வோம்" என்பதாகும். ரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து, தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டு ரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் மீம்ஸ் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் சிறப்புப் பரிசுகளை வழங்கினர். அத்துடன், ஆண்டுதோறும் தன்னார்வ ரத்தக் கொடையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றும் ரத்த தான முகாம் அமைப்பாளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு, பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிக் கவுரவித்து வருகிறது.

தமிழ்நாடு அரசு, தானமாகப் பெறப்படும் ரத்தத்தைச் சிறந்த முறையில் பாதுகாத்துப் பயன்படுத்தும் வகையில், ரத்த தான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை, ரத்த வங்கிகளுக்கு எடுத்துச் சென்று சேமிக்க, குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன நடமாடும் ரத்த ஊர்திகளை வழங்குதல், அரசு ரத்த வங்கிகளில் ரத்தத்தை சேமிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வெப்ப நிலையினைக் கண்காணிக்க டேட்டா லாக்கர் பொருத்துதல், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரசு ரத்த வங்கிகளில் பணிபுரியும் ஆய்வக வல்லுநர்கள் மற்றும் ஆலோசகர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் போன்ற திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9,16,929 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டு, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. நடப்பாண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x