

உதகை
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. குந்தா பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழ்கோத்தகிரி அருகே மரம் விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை பெய்து, மாவட்டத்தையே புரட்டிப் போட்டது. ஏழு பேர் உயிரிழந்ததுடன், உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. வெள்ளம் சூழ்ந்ததால் 5000-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சுமார் ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.
மழை ஓய்ந்ததால், நிலைமை சகஜமானது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்தது. உதகை, குந்தா தாலுக்காக்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக குந்தா பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல, காட்டேரி அணை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இந்நிலையில், கீழ் கோத்தகிரி அருகே மெட்டுக்கல் பகுதியில் நர்சரியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போது ஷெட் மீது நள்ளிரவில் மரம் விழுந்தது. மரம் விழுந்ததில் இருளர் பழங்குடியின இளைஞர் நிதீஷ் (21) உயிரிழந்தார். சக்திவேல் என்பவர் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை நிலவரப்படி கோத்ராவில் அதிகபட்சமாக 107 மி.மீ., மழை பதிவானது. அவலாஞ்சியில் 83 மி.மீ., உதகையில் 20.1 மி.மீ., எமரால்டில் 64 மி.மீ., கெத்தையில் 36 மி.மீ., அப்பர் பவானியில் 10 மி.மீ., குன்னூரில் 31 மி.மீ., பர்லியாறு பகுதியில் 16 மி.மீ., கேத்தியில் 51 மி.மீ., கோத்தகிரியில் 38 மி.மீ., கோடநாட்டில் 35 மி.மீ., மழை பதிவானது.