கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: 4 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி- உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: 4 பேர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி- உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு
Updated on
1 min read

மதுரை

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஜாமீன் கோரி 4 பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015-ல் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் ஜோதிமணி இறந்துவிட்டார்.

கோகுல்ராஜின் தாயாரின் மனுவை ஏற்று கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மவாட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஈரோட்டைச் சேர்ந்த சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில்,"கோகுல்ராஜ் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவரது தாய் சித்ரா அளித்த புகாரின் பேரில் என் மீதும், யுவராஜ் உட்பட 16 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 2015 அக்டோபரில் 1ல் கீழமை நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த ஜாமின் 2018 ஜூன் 2-ல் தேதி ரத்து செய்யப்பட்டது.

நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் மதுரை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

அங்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு கடந்த ஜூன் 26ல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே, அதனை ரத்து செய்து எனக்கு இந்த வழக்கில் ஜாமின் வழங்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதி பார்த்திபன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை மற்ற வழக்குகளைப் போல் சாதாரணமாகக் கருத முடியாது எனக் கூறி சந்திரசேகர், பிரபு, கிரிதரன், சுரேஷ் ஆகியோர் ஜாமின் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in