Last Updated : 30 Sep, 2019 12:04 PM

 

Published : 30 Sep 2019 12:04 PM
Last Updated : 30 Sep 2019 12:04 PM

செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிச் சென்ற மினி லாரி வெடித்து விபத்து: மூவர் பலி; 10 பேர் படுகாயம் - உரிமையாளர் கைது

விழுப்புரம்

செஞ்சி அருகே பட்டாசு ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். மினி லாரி உரிமையாளர் வீராசாமி கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் இருந்து செஞ்சி நோக்கி மினி லாரி ஒன்று பட்டாசு பொருட்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 7.30 மணிக்கு செஞ்சியிலிருந்து தங்கிக் கொண்டான் என்ற பேருந்து நிலையத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு ரேடியேட்டரில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது லாரியில் புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் லாரி டிரைவரிடம் கூறினர்.

உடனடியாக லாரி டிரைவர் பின்பக்கம் வந்தார். அப்போது திடீரென்று, எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால் மினி லாரியில் இருந்த தகர இயந்திரங்கள் வெடித்தன. இதில் சாலையோரம் இருந்த டீக்கடை, சலூன் கடை, சிமெண்ட் சீட் உள்ளிட்ட கடைகள் மற்றும் நான்கு வீடுகள் சேதமடைந்தன.

அருகிலிருந்த பைக் தீயில் கருகியது. உடல்கள் அடையாளம் தெரியாமல் சிதைந்த நிலையில் மூன்று பேர் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. அதில் ஓட்டுநர் இளவரசன், க்ளீனர் சாய்பாபா இறந்தது தெரியவந்தது. இன்னொருவர் யார் என இதுவரை தெரியவில்லை. மேலும் உடல்கள் ஏதாவது இருக்கிறதா என்று போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

அத்துடன் திண்டிவனத்தில் இருந்து செஞ்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பஸ்ஸின் பின்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது, விபத்தில் செந்தில்வேலவன் (45), சுரேஷ் (45), பாஷா (38), பாஷாவின் மனைவி ஆயிஷா (32), ரங்கசாமி (60), விநாயகம் (40), மாரியம்மாள் (45) லாவண்யா (15), சிவசங்கரன் (40), கல்பனா (28) ஆகிய 10 பேர் காயமடைந்தனர்.

மேல் சிகிச்சைக்காக ஆயிஷா, லாவண்யா மற்றும் கல்பனா ஆகியோர் திருவண்ணாமலைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் ஏதேனும் உடல்கள் கிடக்கிறதா எனக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதனையடுத்து மினி லாரி உரிமையாளர் வீராசாமி கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x