

சென்னை
பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ, கனடா செல்வதற்காக எழுதிய ஐஇஎல்டிஎஸ் தேர்சில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க கடந்த 12-ம் தேதி, துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன.
இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியது.
மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த சுபஸ்ரீ, கடந்த 12-ம் தேதி கனடா செல்வதற்கான ஐஇஎல்டிஎஸ் தேர்வை எழுதி முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போதுதான் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அதில் காயமடைந்த சுபஸ்ரீ, பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் கடுமையான விமர்சனங்களையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. பேனர் வைத்து, விபத்து நடக்கக் காரணமான இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் அவரின் மைத்துனர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஐஇஎல்டிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்றாலும் கனடா செல்ல மகள் சுபஸ்ரீ இல்லையே என்று அவரின் பெற்றோர் கண்கலங்கினர்.
IELTS தேர்வு
சர்வதேச ஆங்கில மொழித் தேர்வான IELTS, விண்ணப்பதாரர்களின் மொழித் திறனைப் பரிசோதிக்க உருவாக்கப்பட்ட தேர்வு முறையாகும். தொலைத்தொடர்பு மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் இடங்களில் படிக்கவோ, பணி புரியவோ விரும்புவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும். லண்டன், கனடா மற்றும் இன்னும் சில நாடுகளில் படிக்க, வேலை பார்க்க ஐஇஎல்டிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இதில்தான் சுபஸ்ரீ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.