Published : 11 Mar 2014 05:57 PM
Last Updated : 11 Mar 2014 05:57 PM

இரட்டை இலை விவகாரம்: ஸ்டாலினுக்கு ஜெயலலிதா கேள்வி

அரசின் சிறிய பஸ்களில் உள்ள இரட்டை இலை படங்களை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்துள்ள திமுக பொதுச் செயலர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை ஆதரித்து இன்று பிரச்சாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மக்கள் மனங்களில் என்ன உணர்வு நிலவியதோ அதே உணர்வு தான் தற்போது உங்கள் மனங்களில் நிலவுகிறது. எந்தத் தியாகத்தை செய்தாவது இந்திய நாட்டை சூறையாடிய, நாட்டின் வளத்தை கொள்ளையடித்த,

வெள்ளையர்களை, கொள்ளையர்களை, கொடுங்கோலர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உணர்வு தான் அப்போது மக்கள் மனங்களில் இருந்தது. தற்போது, இந்த நாட்டின் வளத்தை சுரண்டிக் கொண்டிருக்கின்ற கொள்ளையர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் தான் இன்று நாடெங்கிலும் மக்கள் இருக்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு ஊழல்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தையே சீரழித்த, நாட்டை சூறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; அது மட்டும் போதாது; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமையவிடக் கூடாது என்ற மன நிலையில் தான் நீங்களும் இருக்கிறீர்கள்; இந்தியா முழுவதிலும் இன்று மக்கள் அதே மன நிலையில் தான் இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்; அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும்.

சிதம்பரத்தில் நலத் திட்டங்கள்

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 33 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம். சிதம்பரம் நகராட்சியில் 75 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டத்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 40 கோடி ரூபாய் செலவில் இந்தத் தொகுதிக்குட்பட்ட வீராணம் ஏரியை தூர் வாருவதற்கும்; வடவார் வாய்க்கால்களை புனரமைப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வீராணத்தில் தண்ணீர் வற்றியவுடன் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன. அரியலூரில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தை நவீனப்படுத்துவதற்காக 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரியலூர் மாவட்டம், கரை வெட்டி பறவைகள் சரணாலயத்தில் 22 லட்சம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 42 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை சீரமைத்திட 88 கோடியே 39 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

இரட்டை இலை விவகாரம்

கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ்நாட்டிற்காக எதையாவது செய்ததா? 'மக்கள் நலம்' 'மக்கள் நலம்' என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள் நலத்தை மறந்துவிட்டார். நீங்களும் கருணாநிதியை மறந்து விட்டீர்கள். இதனால் விரக்தி அடைந்த கருணாநிதி, தனது மகன் ஸ்டாலின் மூலம் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் அளிப்பவை இருக்கிறதோ, அவற்றையெல்லாம் மறைக்க வேண்டும் என்ற ரீதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தேர்தல் ஆணையத்திடமும் தி.மு.க. சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டு உள்ளது.

அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியினுடைய சின்னம் கை. அனைவரின் கைகளையும் வெட்டிவிட வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? அல்லது கையுறைகளை போட்டுக் கொண்டு கைகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று மனு கொடுப்பாரா ஸ்டாலின்? சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மனு கொடுப்பார்களா?

ஒரு கட்சிக்கு மாம்பழம் சின்னம் இருக்கிறது. எனவே மாம்பழம் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் மனு கொடுப்பாரா? இது போன்றது தான் 'இரட்டை இலை' சின்னமும். "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்" என்பது பழமொழி. இதைப் போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டு அஞ்சும் தி.மு.க-வினருக்கு எதைப் பார்த்தாலும் "இரட்டை இலை" போலவே தெரிகிறது. அதனால்தான் ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட திமுக-விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

நான் சொல்வதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாக்கு என்பது உங்கள் உரிமை. உங்கள் வாக்கு என்பது இந்த நாட்டின் சொத்து. உங்கள் வாக்கை வீணாக்கிவிடாதீர்கள். வேறு கட்சிகளுக்கு வாக்களித்தால் அது எதற்கும் உதவாது. அவர்களும் வெற்றிபெற மாட்டார்கள். உங்கள் வாக்குகள் வீணாகிப் போய்விடும். ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வாக்களித்தால், உங்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும். நாட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும். நிச்சயமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு பல நன்மைகளை செய்யும் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அளிக்க வேண்டும். எங்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x