

புதுச்சேரி
புதுச்சேரியில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காந்தி வீதியில் பிரசித்திப் பெற்ற வேதபுரீஸ்வர் கோயில் உள்ளது. இங்கு கடந்த 26-ம் தேதி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை 100-க்கும் மேற்பட்டோர் வாங்கி சாப்பிட்டுள்ளனர். மேலும் இந்த பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு சென்று குழந்தைகள் மற்றும் உறவினர்களுக்கும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் பிரசாதம் சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
அவர்களில் 20-க்கும் மேற்பட் டோர் நேற்று புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
கெட்டுப்போன புளியோதரை சாப்பிட்டதால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறும்போது, “கோயிலில் வழங்கப்பட்ட புளியோதரை பிரசாதம் கோயிலில் சாமி விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்யில் தயாரிக்கப்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இக்கோயிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதேபோல் பக்தர்களுக்கு வழங்க தயாரித்து வைக்கப்பட்டிருந்த புளியோதரை பிரசாதம் கெட்டுப்போனது தெரியவந்ததால் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுவது தடுக்கப்பட்டது” என்றார்.
இதற்கிடையே கோயிலில் பிரசாதம் சாப்பிட்டு பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.