113 வயது ‘மிட்டாய் தாத்தா’வுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு: வட்டாட்சியர் நேரில் விசாரித்து பரிந்துரை

113 வயது ‘மிட்டாய் தாத்தா’வுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க ஏற்பாடு: வட்டாட்சியர் நேரில் விசாரித்து பரிந்துரை
Updated on
1 min read

தஞ்சாவூர்

‘இந்து தமிழ்’ நாளிதழ் செய்தி எதிரொலியாக, தஞ்சாவூரில் 113 வயதுடைய மிட்டாய் தாத்தாவுக்கு தமிழக அரசின் சார்பில் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பர்மாவைச் சேர்ந்தவர் முகமது அபுகாசிர்(113). அங்கு நடைபெற்ற போரின்போது, இவரது மனைவி, மகன்கள், மகள் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த 1956-ம் ஆண்டு தனது 50-வது வயதில் தஞ்சாவூர் வந்த இவர், மகர்நோன்புச்சாவடி ஆடக்கார தெருவில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

தொடக்கத்தில் டீ கடையில் வேலை பார்த்து வந்த இவர், பின்னர் மிட்டாய்களை தயாரித்து, தெருக்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். தற்போது 113 வயதானாலும், தன்னம்பிக்கையுடன் மிட்டாய் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த வயதிலும், யாரிடமும் எந்த உதவியும் கேட்காமல், சமைப்பது உள்ளிட்ட தனது அனைத்து தேவைகளையும் தானே பூர்த்தி செய்து கொள்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரேஷன் கார்டும், முதியோர் உதவித் தொகையும் பெற விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து 'இந்து தமிழ்' நாளிதழில் கடந்த 27-ம் தேதி செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரகுராமன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்ராஜன் ஆகியோர் நேற்று முகமது அபுகாசிரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, முகமது அபுகாசிரின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினோம். அவருக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் முதியோர் ஓய்வூதியமாக ரூ.1,000 வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணை, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் இன்று (செப்.30) அவரது வீட்டுக்கே சென்று வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in