சென்னையில் விலை உயர்வை கட்டுப்படுத்த டியூசிஎஸ் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.30: 4 நாட்களில் 22 டன் விற்று தீர்ந்தன

சென்னையில் விலை உயர்வை கட்டுப்படுத்த டியூசிஎஸ் கடைகளில் வெங்காயம் கிலோ ரூ.30: 4 நாட்களில் 22 டன் விற்று தீர்ந்தன
Updated on
2 min read

ச.கார்த்திகேயன்

சென்னை

சென்னையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம் நடத்தும் நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.30-க்கு விற்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களில் மொத்தம் 22 டன் வெங்காயம் விற்று தீர்ந்துள்ளன.

வெங்காய உற்பத்தியில் மகா ராஷ்டிரா, முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. அம்மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்த படியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய் யப்படுகிறது.

இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அம்மாநிலங்களில் வெங்காய பயிர்கள் அழித்தன. அங்கிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பப் படும் வெங்காயத்தின் அளவு குறைந்தது. அதனால் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே உள் நாட்டில் வெங்காய விலை உயர் வைக் கட்டுப்படுத்த, வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு நேற்று தடை விதித்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு, வெங்காய வரத்து குறைந்து கடந்த வாரம் கிலோ ரூ.50-ஐ தாண்டியது. திருவல்லிக்கேணி ஜாம் பஜார் உள்ளிட்ட சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, கோயம் பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45, சில்லறை விற்பனை சந்தைகளில் ரூ.60-க்கு விற்கப்பட்டு வருகின்றன. டெல்லி போன்ற பெருநகரங்களில் கிலோ ரூ.80-ஐ தாண்டியது.

சென்னையில் வெங்காய விலை யைக் கட்டுப்படுத்த, டியூசிஎஸ் கூட்டுறவு சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டு வந்தது. இதற்கிடையே டியூசிஎஸ் நிறுவனம் கிலோ ரூ.30 ஆகக் குறைத்து விற்பனை செய்து வருகிறது. மேலும், அந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வரும் நியாய விலைக் கடைகளிலும் தற்போது வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக டியூசிஎஸ் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

வெங்காய விலையைக் கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கு மாறு அரசு சார்பில் அறிவுறுத்தப் பட்டது. இதைத் தொடர்ந்து டியூசிஎஸ் சார்பில் நடத்தப்பட்டு வரும் 256 நியாய விலைக் கடைகளிலும், கடந்த 25-ம் தேதி முதல் வெங்காயம் விற்கப்பட்டு வருகிறது. தற்போது பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.30-க்கு விற்று வருகிறோம். கடந்த 4 நாட்களில் மொத்தம் 22 டன் வெங்காயம் விற்று தீர்ந்துள்ளன. மேலும் கொள்முதல் செய்து விற்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

திருவல்லிக்கேணியில் உள்ள நியாய விலைக் கடைக்கு வெங் காயம் வாங்க வந்த ரமண சரஸ்வதி கூறும்போது, ‘‘வெளிச்சந்தையில் கிலோ ரூ.70 வரையிலும், 3-ம் தர சிறு வெங்காயம் கிலோ ரூ.40-க் கும் விற்கப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் கூட ரூ.57-க்கு விற்கப் படுகின்றன. ஆனால் இங்கு தரமான வெங்காயம் மலிவு விலை யில் ரூ.30-க்கு விற்கப்படுவது ஆச்சர்யத்தை அளிக்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in