

சென்னை
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 56-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். ‘சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான்’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். பிரதமர் வருகையை யொட்டி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஐஐடி, இந்த ஆண்டு 60-வது ஆண்டில் அதாவது வைர விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, இன்று நடக்கும் ஐஐடியின் 56-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று காலை 9 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவுக்கு செல்லும் பிரதமர், அங்கு நடக்கும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கிறார். சுற்றுச்சூழல், மருத்துவம், கல்வி ஆகிய 3 துறைகளில் இந்தியாவுக்கு தேவையான அம்சங்கள், இப்போதைய சிக்கல்களுக்கான தீர்வு களை கண்டறிந்து அதற்கான ஆலோசனை களை முன்வைக்க 'சிங்கப்பூர் இந்தியா ஹேக்கத்தான் 2019’ என்ற போட்டி நடத்தப்பட்டது. இந்திய ஐஐடிக்களிலும், சிங்கப்பூர் என்டியூ பல்கலைக்கழகத்திலும் படிக்கும் மாணவர்கள் 120 பேர் பல் வேறு குழுக்களாக பிரிந்து போட்டியில் பங்கேற்றனர். அதில் சிறந்த ஆலோசனை களை வழங்கிய 3 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்தப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகளை பிரதமர் மோடி வழங்குகிறார். இந்த விழாவில் சிங்கப்பூர் நாட்டின் கல்வி அமைச்சர் ஓங் யே குங், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், இணை அமைச்சர் சஞ்சய் சாம்ராவ் தோத்ரே ஆகியோர் பங்கேற் கின்றனர். அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு நடக்கும் ஐஐடி-யின் 56-வது பட்டமளிப்பு விழா வில் பிரதமர் பங்கேற் கிறார். மாணவ, மாணவிகளுக்கு பட் டங்களை வழங்கி சிறப்புரை ஆற்று கிறார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இரு விழாக்களையும் முடித்துக் கொண்டு பகல் 12.45 மணிக்கு ஐஐடி வளாகத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, பிற்பகல் 1.20 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் வருகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம், ஐஐடி வளாகம், விழாக்கள் நடக்கும் அரங் கம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண் காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் ஹெலிகாப்டர் வந்திறங்கு வதற்கு வசதியாக ஐஐடி வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளம் சீரமைக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் வரவேற்பு
கடந்த மே மாதம், 2-வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். அதன் பிறகு முதல்முறையாக சென்னை வரும் பிரதமரை வரவேற்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் 5-ம் எண் நுழைவுவாயிலில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக பொறுப்பாளரான தேசிய பொதுச்செயலாளர் பி.முரளிதர ராவ், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.