Published : 29 Sep 2019 02:51 PM
Last Updated : 29 Sep 2019 02:51 PM

குரூப்-2; தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது: டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை
குரூப்-2 புதிய பாடத்திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், இனி தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது என விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக எதிராகவும், ஆதரவாகவும் பல்வேறு கருத்துகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் சென்னையில், டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

குரூப்- 2 தேர்வின் நடைமுறை ஏற்கெனவே இருந்தது தான். புதிதாக எந்த மாற்றமும் செய்யவில்லை. தேர்வில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. பலன் பெறுவார்கள். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நன்மை ஏற்படும்.

புதிய பாட திட்டத்தினால், தமிழில் படிக்காதவர்கள், எழுத தெரியாதவர்கள் தேர்ச்சி பெற முடியாது. முன்னர், பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலம் தேர்வுகள் இருந்தன. தமிழ் தெரியாத ஒருவர் பொது அறிவு மற்றும் பொது ஆங்கிலத்தை தேர்வு செய்து, தேர்வின் கடைசி கட்டம் வரை வர முடியும். தற்போது கட்டாயம் தமிழ் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முதன்மைத்தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்ல முடியும். ஆனால் புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குரூப்-2 தேர்வில் இனி கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டம் இதுவரை நடந்தது இல்லை. இனி வரும் நாட்களிலும் நடக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x