

சென்னை
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதியின் பூர்வாச்ரம தந்தை ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி (96) நேற்று மதியம் 11.26 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். பெரியபாளையம் அருகே உள்ள அவரது பூர்வீக ஊரான தண்டலத்தில் இன்று இறுதி சடங்குகள் நடைபெறும்.
ரிக்வேதத்தில் வல்லவரான கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, போளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தின் பாடசாலை யில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேதம் பயிற்றுவித்துள்ளார். தந்தையே குருவாக இருந்து (நியம அத்யாயனம்) தனது மகன்களான சங்கரநாராயணன் மற்றும் ரகு இருவருக்கும் ரிக்வேதத்தை பயிற்றுவித்தார்.
சங்கரநாராயணன் தனது 13-வது வயதில் காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஆனார். மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் காலத்தில் காஞ்சி மடத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி சமயத்தில் நடைபெறும் ரிக்வேத சம்ஹிதா ஹவனில் ஸ்ரீ சாஸ்திரி பங்கேற்றுள்ளார்.
ஸ்மார்த்த தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி, விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு வேத வகுப்புகள் நடத்தி வந்தார்.
சில வருடங்கள் முன்பு வரை தனது நித்ய அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வந்த ஸ்ரீ சாஸ்திரி, வயது காரணமாக வீட்டிலேயே இருந்து வந்தார். உடல்நலக் குறைவால் மஹாளய அமாவாசை தினத்தில் இறைவனடி சேர்ந்த ஸ்ரீ சாஸ்திரிக்கு 4 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர்.
சமஸ்கிருதத்தில் சிறந்த ஞானம் பெற்ற ஸ்ரீ சாஸ்திரி, ஸ்வாத்யாயம், சதாசார ஸ்மிருதி யிலும் வல்லவர் என்பது குறிப்பிடத் தக்கது.