

பேராசிரியர்கள் நியமனத்தில் யுஜிசியின் விதிகளை பின்பற்றவேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில்," தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற மருத்துவ கல்லூரிகள் மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பிஎஸ்சி ரேடியாலஜி இமேஜிங் டெக்னாலஜி பிரிவு உள்ளிட்ட படிப்புகளுக்கான பேராசிரியர்கள், இணைப்பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்டோரை நியமனம் செய்வது தொடர்பான விதிமுறைகளை யுஜிசி நிர்ணயம் செய்துள்ளது.
இதன்படி பிஎஸ்சி ரேடியாலஜி இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளுக்கு அந்தந்த பிரிவில் தொழில்நுட்ப பிரிவில் பயின்றவர்களையே நியமிக்க வேண்டும்.
ஆனால் பல இடங்களில் யுஜிசி விதிகளை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்வதில்லை.
எனவே தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் யுஜிசி விதிகளை பின்பற்றி துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார் .
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் ," அனைத்துவிதமான பணி நியமனங்களும் கண்டிப்பான முறையில் விதிகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். ஏனெனில் பொது வேலைவாய்ப்பு என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது.
பணி நியமனங்கள் நியமன விதிகளைப் பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் நடந்ததாக இருக்க வேண்டும். இந்த நியமனங்கள் திறந்த நிலையிலான போட்டியை கொண்டதாக இருக்க வேண்டும். ப
ணி நியமனங்களில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் சார்ந்த பணி நியமனங்கள் குறித்து முறையாக கண்காணிக்க வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை.
இந்த நியமனங்களில் விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது பல்கலைக்கழகத்தின் பொறுப்பு.
எனவே எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைவிப்புப் பெற்ற மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்தும் நிறுவனங்களில் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை நியமனம் செய்யும்போது யுஜிசி விதிகளில் கூறப்பட்டுள்ளவாறு சம்பந்தப்பட்ட துறை சார்த்த உரிய தகுதிகளை கொண்டவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும்.
எனவே விதிப்படியான நியமனங்கள் நடந்திடத் தேவையான நடவடிக்கைகளை யுஜிசி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தரப்பில் மேற்கொள்ள வேண்டும் " என உத்தரவிட்டுள்ளார்.