

ராமேசுவரம்
மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் அக்னி தீர்த்தக் கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து தீர்த்த நீராடினர்.
மஹாளயம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும். மேலும் புரட்டாசியில் வரும் அமாவாசையே மஹாளய அமாவாசை என்று அழைப்பர்.
முன்னோர்களுக்கு மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களின் நல்லாசிகளியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வெள்ளிக்கிழமை மாலையில் இருந்தே மஹாளய அமாவாசைக்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும் ராமேசுவரம் வரத் தொடங்கினர்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அக்னி தீர்த்தக்கடலில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் புனித நீராடி, நான்கு ரதவீதிகளில் பல மணி நேரங்கள் காத்திருந்து கோவிலுக்குள்ளே உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வத வர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர்.
இது போல ராமநாதபுரம் மாவட்டம் சேதுகரை, தேவிப்பட்டிணம் மற்றும் வைகை நதி நீர்நிலைகளிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர்.
-எஸ்.முஹம்மதுராஃபி