

விருதுநகர்
மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 9 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சிமலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை.
இங்கு உள்ள சுந்தரமகாலிங்கமும், சந்தன மகாலிங்கமும் மிக பிரசித்திபெற்ற தலங்கள். தற்போது சதுரகிரி மலைக்கு அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோச நாள்களிலும் அதற்கு முன்னதாகவும், அடுத்ததாகவும் என 3 நாள்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக்குச் செல்ல நேற்று முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் அமாவாசை தினமான இன்று வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 9 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு கருதி 100க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தட்டிருந்தனர். மலைக்குச் செல்லும் முன் பக்தர்கள் உடமைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.