கடந்த மூன்றாண்டு நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ மூலம்  விசாரிக்க வேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

கடந்த மூன்றாண்டு நீட் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ மூலம்  விசாரிக்க வேண்டும்: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
Updated on
1 min read

நீட் தேர்வு முறைகேடு குறித்து கடந்த மூன்றாண்டு நடந்த தேர்வையும் விசாரிக்க வேண்டும், ,மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:

“நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதி, அதன் மூலம் தேனி மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் சேர்ந்த பிரச்சினை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. உதித் சூர்யா அவரது தந்தை டாக்டர்.வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மேலும் பல மாணவர்கள் ஆள்மாறாட்ட முறைகேடுகள் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாகத் தெரிகிறது. வடமாநிலத் தேர்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகளே இதற்குக் காரணம்.ஏராளமான மாணவர்கள் முறைகேடுகள் செய்து அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளிலும் இது போன்ற முறைகேடுகள் நடைபெற்றிருப் பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இவ் வழக்கை சிபிஐ க்கு மாற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக ஏராளமான மாணவர்கள் ,முன் கூட்டியே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முன்பணம் செலுத்தியதாக செய்திகள் வருகின்றன. இவ்வாண்டு ஏராளமான வெளி மாநில மாணவர்கள் ,போலி இருப்பிடச் சான்றிதழ்களை பெற்று, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இவை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கையை மத்திய - மாநில அரசுகள் மட்டுமே நடத்த வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை தானாக நடத்த அனுமதிக்கக் கூடாது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நீட் தேர்விலிருந்து மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு வழங்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டுவர உள்ள நெக்ஸ்ட் தேர்வு ,ஊழல் முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். மாநில உரிமைகளை , மருத்துவக் கல்வியில் முழுமையாக பறித்துவிடும்.சமூக நீதிக்கு எதிராக அமைந்துவிடும்.

எனவே, நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு, திணிக்கக் கூடாது.அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரிக்கு தமிழக அரசு மீண்டும் அனுமதி வழங்கியது ஏன் ,என்பதை விளக்க வேண்டும்”.

இவ்வாறு ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in