Published : 28 Sep 2019 06:27 PM
Last Updated : 28 Sep 2019 06:27 PM

கிருஷ்ணகிரியில் தொடரும் சோகம்: 5 நாட்களில் வெவ்வேறு ஏரி, குட்டைகளில் மூழ்கி 7 சிறுமி, சிறுவர்கள் உயிரிழப்பு; பெற்றோர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடுமுறை தினங்களில் நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் மாணவர்கள், நீச்சல் தெரியாமலும், ஆழப்பகுதியில் சிக்கியும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டில் மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்பு மற்றும் குடிமாரத்துத் திட்டத்தின் கீழ் ஏரிகள், குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளன.

கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையால், தூர்வாரப்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இவ்வாறான நிலையில், தற்போது அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தற்போது விடுமுறை தினத்தில் வீட்டில் உள்ள குழந்தைகள், ஏரிகள், குளம், குட்டைகளில் விளையாட செல்கின்றனர். அவ்வாறு நீரில் விளையாடும் ஆர்வத்தில், கடந்த 5 நாட்களில் 4 சிறுவர்கள், 3 சிறுமிகள் உட்பட 7 பேர் வெவ்வேறு நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தடுக்க பெற்றோர், குழந்தைகளை விடுமுறை தினத்தில் கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, "நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பெற்றோர் தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது. நீச்சல் நன்கு தெரிந்த பெரியவர்கள் துணையின்றி குழந்தைகளை கிணறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்க அனுப்பக் கூடாது. விடுமுறை தினத்தில் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் குழந்தைகளுக்கும் அறிவுரை வழங்கி பெற்றோர்கள் அனுப்ப வேண்டும். கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு மூலம் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க முடியும்.

இதே போல் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு நீர்நிலைகளுக்கு செல்லும் போது பெற்றோர் துணை இல்லாமல் செல்லக் கூடாது என்பதை கண்டிப்பாக அறிவுறுத்தி, .ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்," என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கூறும்போது, "தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. எனவே, பொதுமக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் வயதான பெரியவர்கள் போன்றோரை நீர்நிலைகளின் அருகில் விளையாடவோ, குளிக்கவோ செல்லாதவாறு கண்காணித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்றார்.

எஸ்.பி.பண்டிகங்காதர் உத்தரவின் பேரில் காவல்துறையினர், நீர்நிலைகளில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். கிராமங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x